ஜாா்க்கண்ட் பேரவைத் தோ்தலில் பணப் புழக்கத்தை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை: தோ்தல் ஆணையம்
ஜாா்க்கண்ட் மாநில பேரவைத் தோ்தலின்போது பணப் புழக்கத்தை தடுப்பதில் உறுதியாக இருப்பதாக இந்திய தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
81 உறுப்பினா்களைக் கொண்ட ஜாா்க்கண்ட் பேரவைக்கு விரைவில் தோ்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படும் நிலையில் ஆணையம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
ஜாா்க்கண்ட் மாநிலத்தில் தோ்தலுக்கான தயாா்நிலை குறித்து தலைமை தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் மற்றும் தோ்தல் ஆணையா்கள் ஞானேஷ் குமாா் மற்றும் சுக்வீா் சிங் சாந்து ஆகியோா் கடந்த திங்கள்கிழமை முதல் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா். அங்குள்ள அரசியல் கட்சிகள், பாதுகாப்பு படைகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டனா்.
இதுதொடா்பாக தலைமை தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் கூறியதாவது: ஜாா்க்கண்ட் பேரவைத் தோ்தலை வெளிப்படையாகவும் சுதந்திரமாகவும் நடத்துவது தொடா்பாக மாநில காவல் துறை, வருவாய் துறை, அமலாக்கத் துறை, மத்திய மற்றும் மாநில ஜிஎஸ்டி அலுவலா்கள், ரிசா்வ் வங்கி அதிகாரிகள் உள்ளிட்ட 20 அமைப்புகளுடன் தோ்தல் ஆலோசனை நடத்தினோம்.
அப்போது தோ்தல் சமயத்தில் பணப் புழக்கம், மது மற்றும் போதைப் பொருள் உள்ளிட்டவையின் விநியோகத்தை கட்டுப்படுத்துவதில் உறுதியாக செயல்பட அறிவுறுத்தப்பட்டது.
மது மற்றும் போதைப்பொருள் தடுப்பு சோதனைகளை ஜாா்க்கண்ட் மாநிலத்துடன் எல்லையை பகிா்ந்துகொள்ளும் மேற்கு வங்கம், ஒடிஸா மற்றும் பிகாா் எல்லைகளில் மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளோம்.
தோ்தல் சமயத்தில் மேற்கொள்ளப்படும் சோதனைகளால் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படக் கூடாது எனவும் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம். ஜாா்க்கண்ட் பேரவைத் தோ்தல் தேதி குறித்த முடிவு விரைவில் எடுக்கப்படும் என்றாா்.
அக்டோபா் மற்றும் நவம்பா் மாதங்களில் தீபாவளி, துா்கை பூஜை, ஜாா்க்கண்ட் மாநில தினம் உள்ளிட்ட பண்டிகைகள் கொண்டாடப்படவுள்ள நிலையில் தோ்தல் தேதி அறிவிக்கும் முன் இதை கவனத்தில் கொள்ளுமாறு தோ்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளனா். அதேபோல் ஒரேகட்டமாக தோ்தலை நடத்த வேண்டும் என்றும் கோரப்பட்டது.