புதிய உச்சத்துக்குப் பிறகு சரிவுடன் முடிந்த சென்செக்ஸ்!

சென்செக்ஸ் 85,000 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தைத் தொட்டு சரிவுடன் முடிந்தது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

வணிகத்தின் 2வது நாளான இன்று (செப். 24) சென்செக்ஸ் 85,000 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தைத் தொட்டு பின்னர் சரிவுடன் முடிந்தது.

இதேபோன்று நிஃப்டி 26 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து புதிய சாதனை படைத்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 14.57 புள்ளிகள் சரிந்து 84,914.04 என்ற புள்ளிகளுடன் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 0.017% சரிவாகும்.

வணிகத்தின் தொடக்கத்தில் 84,903 புள்ளிகளுடன் இருந்தது. பின்னர் பிற்பகல் 2 மணியளவில் 85, 106 என்ற புதிய உச்சத்தைத் தொட்டது. பின்னர் படிப்படியாக சரிந்து 84,914 புள்ளிகளுடன் நிறைவு பெற்றது.

12 வாரங்களில் அதிக ஏற்றம்

பங்குச்சந்தையில் கடந்த 4 நாள்களுக்கு முன்பு 84000 புள்ளிகளைக் கடந்தது சென்செக்ஸ். செப்டம்பர் 12ஆம் தேதி 83000 புள்ளிகளைக் கடந்தது. இதற்கு முன்பு ஆக. 1ஆம் தேதி 82,000 புள்ளிகளைத் தொட்டது. ஜூலை 18ஆம் தேதி 81,000 புள்ளிகளைக் கடந்தது. கடந்த 12 வாரங்களில் மட்டும் சென்செக்ஸ் 80,000 புள்ளிகளில் இருந்து 85,000 புள்ளிகளைத் தொட்டுள்ளது.

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தரப் பங்குகளில் டாடா ஸ்டீல் 4.25%, பவர் கிரிட் 2.61%, டெக் மஹிந்திரா 1.87%, எச்.சி.எல் 1.31%, மஹிந்திரா & மஹிந்திரா 0.81%, ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் 0.78%, டாடா மோட்டார்ஸ் 0.57% பங்குகள் உயர்ந்திருந்தன.

மேலும், ஹிந்துஸ்தான் யூனிலிவர்ஸ் -2.58%, அல்ட்ராடெக் சிமென்ட் -1.68%, இந்தஸ் இந்த் வங்கி -1.15%, நெஸ்ட்லே இந்தியா -1.06%, கோட்டாக் வங்கி -1.04%, டைட்டன் கம்பெனி -0.93% சரிந்து காணப்பட்டன.

நிஃப்டியில் புதிய உச்சம்

இதேபோன்று வணிக நேர முடிவில் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 1.35 புள்ளிகள் உயர்ந்து 25,940 புள்ளிகளுடன் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் 0.0052% உயர்வாகும்.

வணிக நேர தொடக்கத்தில் 25,921 என்ற புள்ளிகளுடன் தொடங்கிய நிலையில், படிப்படியாக உயர்ந்து 26,011.55 என்ற புதிய உச்சத்தைத் தொட்டது. பிற்பகலில் 25,939 என்ற புள்ளி அளவு சரிந்தது. பின்னர் 1.39 புள்ளிகள் உயர்ந்து 25,940 என நிறைவு பெற்றது.

முக்கிய நகரங்களில் சரிந்த வீடுகள் விற்பனை

நிஃப்டி பட்டியலில் உள்ள 50 தரப் பங்குகளில் ஆஸ்ட்ரா ஜெனகா 16.80%, ஜே.எம். ஃபைனான்சியல் 12.30%, ஸ்சினிடர் 9.90%, கேபிஆர் மில் 7.89%, ஷிப்பர் ஃபுட் 6.80%, நால்கோ 6.24%, ஃபர்ஸ்ட் சோர்ஸ் 6.00%, ரிட்ஸ் 5.43% உயர்ந்திருந்தன.

வங்கித் துறை பங்குகளில் உள்ள 40 நிறுவனங்களில் 7 நிறுவனங்கள் உயர்வுடன் காணப்பட்டன. ஐடி துறையில் உள்ள 177 நிறுவனங்களில் 91 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் இருந்தன. மருந்து துறையில் உள்ள 176 நிறுவனங்களில் 98 நிறுவனப் பங்குகள் உயர்வுடன் இருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.