காங்கிரஸ் எங்கெல்லாம் ஆட்சி அமைக்கிறதோ அங்கெல்லாம் ஊழல் நடைபெறுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஹரியாணாவில் சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 5ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆத் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஹரியாணாவின் கோஹானாவில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
இட ஒதுக்கீடு பிரச்னை தொடர்பான காங்கிரஸை கடுமையாகத் தாக்கி பேசியுள்ளார். இட ஒதுக்கீட்டை எதிர்ப்பது மற்றும் அதன் மீதான வெறுப்பு அவர்களின் ரத்தத்தில் ஊரி இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
காங்கிரஸ் அதிகாரத்தில் இருக்கும் இடத்தில் எல்லாம் ஊழல் நடக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக முதல்வர்களும், அமைச்சர்களும் உள்கட்சி பூசலில் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடகத்தின் முதல்வர், துணை முதல்வர்கள் உள்கட்சி சண்டையில் மும்முரமாக உள்ளனர். தெலங்கானா மற்றும் ஹிமாசலிலும் இதே நிலைதான். எனவே ஹரியாணா மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இந்திய அரசு நடைமுறையில் ஊழலை ஏற்படுத்தி அதனை வளர்த்தெடுத்த கட்சி என்றால் அது காங்கிரஸ் கட்சிதான். இந்தியாவில் ஊழலில் முதன்மையாகக் காங்கிரஸ் விளங்குகிறது.
10 ஆண்டுகளுக்கு முன்பே காங்கிரஸால் ஹரியாணா கொள்ளையடிக்கப்பட்டது. விவசாயிகளின் நிலங்கள் சுரண்டப்பட்டது. ஊழல் நிறைந்த காங்கிரஸ் அரசை அதிகாரத்திலிருந்து தள்ளிவைக்க வேண்டும்.
தவறுதலாகக் கூட காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், உள்கட்சிப் பூசலால் ஹரியாணாவை அழித்துவிடும். காங்கிரஸ் ஒட்டுமொத்த ஊழல் நிறைந்த கட்சி என்று அவர் பேசியுள்ளார்.