வாரத்தின் 3வது வணிக நாளான இன்று (செப். 25) பங்குச்சந்தை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புதிய உச்சங்களைப் பதிவு செய்தன.
அதிகபட்சமாக சென்செக்ஸ் 85,247 புள்ளிகளையும் நிஃப்டி 26,032 புள்ளிகளையும் பதிவு செய்தன.
பங்குச் சந்தை வணிகம் கடந்த சில நாள்களாக உயர்வுடனே காணப்படுகிறது. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புதிய சாதனைகளையும் படைத்து வருகிறது.
புதிய உச்சம் தொட்ட சென்செக்ஸ்
அந்தவகையில் இன்றைய வணிக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 255.83 புள்ளிகள் உயர்ந்து 85,169.87 என்ற புள்ளிகளுடன் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 0.30% உயர்வாகும்.
வணிக நேரத் தொடக்கத்தில் 84,836 புள்ளிகளுடன் தொடங்கிய சென்செக்ஸ், 84,743 புள்ளிகள் வரை சரிந்தது. அதிகபட்சமாக 85,247.42 புள்ளிகள் வரை ஏற்றம் கண்டது.
சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தரப் பங்குகளில் 20 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் காணப்பட்டன. எஞ்சிய 20 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே சரிந்தன.
அதிகபட்சமாக பவர்கிரிட் நிறுவனத்தின் பங்குகள் 3.92% உயர்வு கண்டன. அதற்கு அடுத்தபடியாக ஆக்சிஸ் வங்கி 2.31%, என்டிபிசி 1.87%, எச்.டி.எஃப்.சி. 0.63%, அல்ட்ராடெக் சிமென்ட் 0.47%, ஐடிசி 0.45%, ஐசிஐசிஐ வங்கி 0.40%, எச்.சி.எல். டெக் 0.39%, ரிலையன்ஸ் 0.31% உயர்வுடன் இருந்தன.
டாடா மோட்டார்ஸ், டைட்டன் கம்பெனி, கோட்டாக் வங்கி, ஜெ.எஸ்.டபிள்யூ ஸ்டீல், எஸ்பிஐ, இந்தஸ்இந்த் வங்கி, அதானி போர்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.
பங்குச்சந்தை உயர்வால், எம்&எம், என்டிபிசி, பவர் கிரிட் உள்ளிட்ட 250 பங்குகள் ஓராண்டில் இல்லாத அளவுக்கான வளர்ச்சியைக் கண்டன.
படிக்க | தங்கம் விலை நிலவரம்: ஒரு கிராமே ரூ.7 ஆயிரத்தைத் தாண்டியதா?
26 ஆயிரம் புள்ளிகளைக் கடந்த நிஃப்டி
வணிக நேர முடிவில் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 63.75 புள்ளிகள் உயர்ந்து 26,004.15 புள்ளிகளுடன் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் 0.25% உயர்வாகும்.
வணிக நேரத் தொடக்கத்தில் 25,899 என்ற புள்ளிகளுடன் இருந்த நிஃப்டி, 25,871.35 புள்ளிகள் வரை சரிவைக் கண்டது. எனினும் வணிகம் முடிவதற்கு சற்று நேரம் முன்பு 26 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து, 26,032.80 என்ற உச்சத்தைப் பதிவு செய்தது. பின்னர் வணிக நேர முடிவில், 26,004 என்ற புள்ளிகளுடன் நிறைவு பெற்றது.
நிஃப்டி பட்டியலிலுள்ள 50 தரப் பங்குகளில் சரிகம இந்தியா, ஜீ என்டர்டெயின்மென்ட், மஹிந்திரா லைஃப்ஸ்பேஸ், டாடா கம்யூனிகேஷன், ஏபிபி பவர், பிராமல் பார்மா, பவர் கிரிட், கோத்ரேஜ் ப்ராபர்டீஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் இருந்தன.
படிக்க | ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் பைக்! விரைவில் அறிமுகம்...
ஈஸி ட்ரிப், பாலிசி பஸார், எஸ்பிஎஃப்சி ஃபைனான்ஸ், கிலென்மார்க் லைஃப், ஆஸ்ட்ராஸெனகா, டாபர் இந்தியா, இந்தியன் எனர்ஜி உள்ளிட்ட நிறுவனங்கள் அதிகபட்ச சரிவைக் கண்டன.