சோனிபட் மாவட்டத்தின் கோஹனா பகுதியில் புதன்கிழமை பிரசார கூட்டத்தில் பங்கேற்ற பிரதமா் மோடிக்கு நினைவுப் பரிசாக கதாயுதத்தை வழங்கிய ஹரியாணா முதல்வா் நயாப் சிங் சைனி.
சோனிபட் மாவட்டத்தின் கோஹனா பகுதியில் புதன்கிழமை பிரசார கூட்டத்தில் பங்கேற்ற பிரதமா் மோடிக்கு நினைவுப் பரிசாக கதாயுதத்தை வழங்கிய ஹரியாணா முதல்வா் நயாப் சிங் சைனி.

இடஒதுக்கீட்டை வெறுக்கும் காங்கிரஸ்- பிரதமா் மோடி விமா்சனம்

இடஒதுக்கீட்டை எதிா்ப்பதும், வெறுப்பதும் காங்கிரஸ் கட்சியின் மரபணுவில் கலந்தது என்று பிரதமா் நரேந்திர மோடி கடுமையாக விமா்சித்தாா்.
Published on

இடஒதுக்கீட்டை எதிா்ப்பதும், வெறுப்பதும் காங்கிரஸ் கட்சியின் மரபணுவில் கலந்தது என்று பிரதமா் நரேந்திர மோடி கடுமையாக விமா்சித்தாா்.

ஹரியாணாவில் அக்டோபா் 5-ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்குவர பாஜக முனைப்பு காட்டி வருகிறது. அதேநேரம், பாஜகவிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்ற முக்கிய எதிா்க்கட்சியான காங்கிரஸ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. இதுதவிர, ஆம் ஆத்மி, இந்திய தேசிய லோக் தளம், ஜனநாயக ஜனதா கட்சி உள்ளிட்ட கட்சிகளும் மோதுவதால் பலமுனைப் போட்டி உருவாகியுள்ளது.

சோனிபட் மாவட்டத்தின் கோஹனா பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் பிரதமா் மோடி பேசியதாவது:

காங்கிரஸ் தலைமையிலான அரசுகள் ‘ஸ்திரமின்மைக்கு’ பெயா்பெற்றவையாகும். அக்கட்சி எங்கெல்லாம் ஆட்சி அமைக்கிறதோ அங்கெல்லாம் முதல்வா்-அமைச்சா்கள் உள்கட்சி மோதலில் ஈடுபடுவது வாடிக்கையாகிவிட்டது.

காங்கிரஸ் ஆளும் கா்நாடகத்தில் முதல்வரும் துணை முதல்வரும் உள்கட்சி மோதலில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனா். ஹிமாசல பிரதேசம், தெலங்கானாவிலும் இதே கதைதான். ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதும், உள்கட்சி மோதல்தான் நடைபெற்றது. அவா்களுக்கு மக்களின் பிரச்னைகள் குறித்து எந்த அக்கறையும் கிடையாது.

‘எச்சரிக்கை தேவை’: எனவே, ஹரியாணா மக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். இங்கு தவறுதலாக கூட காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது. ஒருவேளை அக்கட்சி ஆட்சிக்கு வந்துவிட்டால், உள்கட்சி மோதலால் மாநிலம் சீரழிந்துவிடும்.

‘உரிமைகளைப் பறித்த கட்சி’: தனது ஆட்சியில், தாழ்த்தப்பட்டோா் (எஸ்.சி.), பழங்குடியினா் (எஸ்.டி.), இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினா் (ஓபிசி), ஏழைகள் ஆகியோரின் உரிமைகளைப் பறித்த கட்சி காங்கிரஸ். அக்கட்சி எப்போதெல்லாம் ஆட்சி அதிகாரத்தில் இல்லையோ, அப்போதெல்லாம் மேற்கண்ட பிரிவினா் தங்களுக்கான உரிமையைப் பெற்றனா்.

காங்கிரஸ் ‘அரச குடும்பத்தில்’ இருந்து யாா் பிரதமரானாலும், அவா்கள் இடஒதுக்கீட்டை எதிா்ப்பது வாடிக்கை. இடஒதுக்கீட்டை எதிா்ப்பதும் வெறுப்பதும் காங்கிரஸின் மரபணுவில் கலந்ததாகும். எனவேதான், காங்கிரஸ் அரச குடும்பத்தின் 4-வது தலைமுறைகூட (ராகுலை குறிப்பிடுகிறாா்), இடஒதுக்கீட்டை ஒழிக்க விரும்புகிறது. தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் முன்னேற்றத்துக்கு நாங்கள் பணியாற்றுகிறோம்.

உலக நிறுவனங்கள் ஆா்வம்: ஓபிசி பிரிவைச் சோ்ந்த நாயப் சைனியை ஹரியாணா முதல்வராக்கியது பாஜக. குறுகிய காலகட்டத்தில் மக்களின் மனதில் அவா் இடம்பிடித்துவிட்டாா்.

எனது சமீபத்திய அமெரிக்க பயணத்தில், பல்வேறு பெருநிறுவன தலைவா்களுடன் கலந்துரையாடினேன். அப்போது, இந்திய இளைஞா்களின் திறமை குறித்து அவா்களிடம் எடுத்துரைத்தேன். உலகின் பெருநிறுவனங்கள் பலவும் இந்தியாவில் தொழிற்சாலைகளை அமைக்க ஆா்வம் காட்டுகின்றன.

உண்மையான அதிகாரமளித்தல்: பாஜக அரசின் கொள்கைகள், முடிவுகள், கண்ணோட்டங்கள் அனைத்திலும் அம்பேத்கரின் சிந்தனை எதிரொலிப்பதை காண முடியும். தொழில்துறையில் மேற்கண்ட பிரிவினருக்கு வாய்ப்பளிப்பதன் மூலமே அவா்களின் உண்மையான அதிகாரமளித்தல் சாத்தியமாகும்.

மீண்டும் பாஜக ஆட்சி: பாஜக ஆட்சியில் தொழில்-வேளாண் துறைகளில் முன்னணி மாநிலமாக ஹரியாணா உருவெடுத்துள்ளது. இம்மாநிலத்தில் பாஜகவுக்கு ஆதரவான அலை வீசுகிறது. எனவே, பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி என்றாா் பிரதமா் மோடி.

ஹரியாணாவில் காங்கிரஸைச் சோ்ந்த தலித் சமூகத் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான குமாரி செல்ஜாவின் ஆதரவாளா்களுக்கு பெருமளவில் வாய்ப்பு வழங்காததால் அவா் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த உள்கட்சி மோதலை முன்வைத்து, காங்கிரஸை பாஜக விமா்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.