இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்குச் செல்ல பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்னும் நேரம் கிடைக்கவில்லை என்று திரிணமுல் காங்கிரஸ் தலைவர் டெரிக் ஓ பிரையன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவரின் எக்ஸ் பதிவில்,
மக்களவையில் துணை அவைத் தலைவரை இன்னும் நியமிக்கப்படவில்லை என்றும், நாடாளுமன்றக் குழுக்கள் இதுவரை அமைக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
எதிர்க்கட்சியிலிருந்து அவை துணைத் தலைவரை நியமிக்க வேண்டும் என இந்தியா கூட்டணி சார்பில் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் அதற்கு மோடி அரசு செவிசாய்க்கவில்லை. 17-வது மக்களவை கூட்டத்தொடர் முழுவதுமே அவை துணைத் தலைவர் இல்லாமல் நிகழ்ந்தது என்றும் அவர் கூறினார்.
மேலும், கடற்பறவை இணத்தைச் சேர்ந்த ஆலா(ஆர்க்டிக் டெர்ன்) போன்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லும் பிரதமர் மோடிக்கு மணிப்பூருக்குச் செல்ல இன்னும் நேரம் கிடைக்கவில்லை என்றார்.
ஆலா (ஆர்க்டிக் டெர்ன்) என்பது உலகிலேயே நெடுந்தூரம் நிற்காமல் சுற்றிவரும் ஒரு கடற்பறவையாகும். இது ஒவ்வொரு ஆண்டும் சுமார் 35,000 கி.மீ. தொலைவு ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குப் பயணிக்கும். இந்த பறவையுடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டுக் கூறியுள்ளார் ஓ பிரையன்.
அமெரிக்காவில் மூன்று நாள் சுற்றுப்பயணம் முடித்துக்கொண்டு திரும்பிய நிலையில், ஓ பிரையனின் இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
மேலும், வங்காளம் போன்ற மாநிலங்களுக்கு நிலுவையில் உள்ள நிதியையும் மத்திய அரசு இதுவரை வழங்கப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.