ஜம்மு - காஷ்மீரில் அதிகமுறை குயரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது காங்கிரஸ் கட்சிதான் என மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா இன்று (செப். 26) விமர்சித்தார்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் கதுவா பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் அமித் ஷா இன்று (செப். 26) ஈடுபட்டார்.
அப்போது அமித் ஷா பேசியதாவது, ''ஜம்மு - காஷ்மீரை வெளியாட்கள் ஆள்வதாக ராகுல் காந்தி கூறியிருந்தார். அவர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவை குறிப்பிட்டுள்ளார். ராகுல் காந்திக்கு எழுதிக் கொடுத்தவர்கள் அரசியல் தெளிவு இல்லாம் எழுதிக்கொடுத்துள்ளனர். ஜம்மு - காஷ்மீரில் அதிக முறை குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்திய கட்சி என்றால், அது காங்கிரஸ்தான்.
திவிரவாதத்துக்கு முடிவு கட்டும் பாஜகவின் நோக்கத்தால், ஜம்மு - காஷ்மீரில் 55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மக்களவைத் தேர்தலில் 8 ஆயிரம் வாக்குகளைப் பெற்று நாடாளுமன்ற உறுப்பினரான காலம் முடிந்துவிட்டது. தற்போது ஜம்மு - காஷ்மீரில் ஜனநாயகம் வலுவடைந்துள்ளது எனக் குறிப்பிட்டார்.
காஷ்மீர் மக்கள் பாடம் புகட்டுவார்கள்
நீங்கள் ஒருவருக்குள் ஒருவராகவே அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்கிறீர்கள். ஜம்மு - காஷ்மீரில் 40 ஆயிரம் மக்கள் தற்போது ஜனநாயகத்தைக் கொண்டாடுகின்றனர். தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ், மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவை வாரிசு அரசியலையே செய்கின்றன. ஆனால், பிரதமர் மோடியின் முயற்சியால் மாநிலத்தை மேம்படுத்தும் முடிவுகளை எடுப்பதில் ஜம்மு - காஷ்மீர் இளைஞர்கள் பங்கெடுத்துள்ளனர்.
ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீட்டை ரத்து செய்துவிடுவோம் என ராகுல் கூறுகிறார். அவரின் நோக்கம் எதுவாக இருந்தாலும் சரி, இடஒதுக்கீட்டை ரத்தாக விடமாட்டோம்.
பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவரும் ஒரே அடையாளம் தாமரை மலர். ஜம்மு காஷ்மீர் பாதுகாப்புக்காக ரத்தம் சிந்திய ராணுவ வீரர்களை பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் என்று கூறிய பரூக் அப்துல்லாவுக்கு ஜம்மு - காஷ்மீர் மக்கள் பதிலடி கொடுப்பார்கள்.
படிக்க | வேலைவாய்ப்பு முறையை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டார் பிரதமர் மோடி: ராகுல் குற்றச்சாட்டு
பாகிஸ்தானின் செயல்திட்டத்தை பின்பற்றும் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு ஜம்மு - காஷ்மீர் மக்கள் பாடம் புகட்டுவார்கள்'' என அமித் ஷா பேசினார்.
ஜம்மு - காஷ்மீரில் அக்டோபர் 1ஆம் தேதி இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில் பதிவான வாக்குகள் அக்டோபர் 8ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு - காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.