பாஜக உறுப்பினர்களுடன் உரையாற்றிய பிரதமர் மோடி, மற்றவர்கள் குறித்து காங்கிரஸ் கட்சியினருக்கு கவலையில்லை என்று தெரிவித்தார்.
ஹரியாணாவில் அடுத்த மாதத் தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடி இன்று நமோ செயலி மூலம் பாஜக தொண்டர்களுடன் உரையாற்றினார்.
பாஜக தொண்டர்களுடன் பிரதமர் மோடி பேசியதாவது, ``பாஜகவுக்கு எதிராக போட்டியிடுபவர்கள் பொய்களை அடிப்படையாகக் கொண்டுதான் பிரசாரம் செய்கின்றனர். பொய்களையும் வதந்திகளையும் பரப்புவதும், முட்டாள்தனமாக பேசுவதும், சூழ்நிலையை சீர்குலைப்பதும்தான், அவர்களின் உத்தியாக இருந்து வருகிறது.
அவர்களின் பெரும்பாலான நேரம் சண்டையிலும், ஒருவருக்கொருவர் முரண்பாடுகளைத் தீர்ப்பதிலுமே செலவிடப்படுகிறது. 10 ஆண்டுகளாக பொதுநலப் பிரச்னைகளில் அலட்சியமாக இருந்த கட்சி, தனது சொந்த குடும்பத்திற்காகவோ அல்லது தங்கள் சமூகத்திற்காகவோ மட்டும்தான் வாழ்ந்து வருகின்றனர்.
இதுபோன்ற நபர்களால், ஒருபோதும் ஹரியாணா மக்களின் நம்பிக்கையை வெல்ல முடியாது. கடந்த 10 ஆண்டுகளில் எதிர்க்கட்சியாக காங்கிரஸ் தோல்வியடைந்துள்ளது. ஆனால், ஊழலற்ற பாஜக அரசு, மாநிலத்தில் முதல்முறையாக எந்த தவறும் செலவும் இல்லாமல் வேலைவாய்ப்பு வழங்கப்படுவதை உறுதி செய்தது.
ஹரியாணா மக்கள் எங்களுடன் உள்ளனர்; அவர்களின் ஆசீர்வாதம் எங்களுடன் உள்ளது. ஆகையால், வெற்றி உறுதி.
தங்கள் குடும்பங்களுக்காக மட்டுமே காங்கிரஸ் கட்சியினர் வாழ்கிறார்கள். மற்றவர்களின் குழந்தைகளைப் பற்றி காங்கிரஸ் கவலைப்படுவதில்லை.
நாட்டின் பிரதமர் பின்தங்கிய சமூகத்திலிருந்து எப்படி வந்தார், ஹரியாணா முதல்வர் பின்தங்கிய சமூகத்திலிருந்து எப்படி வந்தார் என்பது குறித்துதான் அவர்கள் கவலைப்படுகிறார்கள். பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் பலம் அதிகரித்தால், அவர்களுக்கு என்ன நடக்கும் என்று அவர்கள் நினைப்பதால்தான், அவர்கள் பல்வேறான பொய்களைப் பரப்பி வருகின்றனர்’’ என்று தெரிவித்தார்.
90 உறுப்பினர்களைக் கொண்ட ஹரியாணா சட்டப்பேரவைக்கு அக்டோபர் 5-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அக்டோபர் 8-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இந்த தேர்தலில் போட்டியிட பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஜனநாயக ஜனதா கட்சி, இந்திய தேசிய லோக் தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போட்டியிட களமிறங்கியுள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளாக மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் பாஜகவிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றக் காங்கிரஸ் முயற்சிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.