ஜம்மு-காஷ்மீரில் இயல்பு நிலையா? பாஜகவை விமர்சித்த உமர் அப்துல்லா
ஜம்மு - காஷ்மீர் 2ஆம் கட்டத் தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது.


ஜம்மு - காஷ்மீர் 2ஆம் கட்டத் தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளதாக தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஒமர் அப்துல்லா தெரிவித்தார்.
ஜம்மு - காஷ்மீரில் ஓரளவுக்கு பதிவாகும் வாக்குகளை வைத்து அங்கு இயல்புநிலை இருப்பதைப்போன்று காட்ட பாஜக முற்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
10 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு - காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டத் தோ்தல் அறிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கு கடந்த செப்டம்பா் 18-ஆம் தேதி நடந்த தோ்தலில் 61.38 சதவீத வாக்குகள் பதிவாகின.
அதனைத் தொடர்ந்து நேற்று (செப். 25) இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 56% வாக்குகள் மட்டுமே பதிவானதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது குறித்து தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா பாரமுல்லா பகுதியில் பேசியதாவது,
''உண்மையாகச் சொல்ல வேண்டுமானால், அதிக வாக்குகள் பதிவாகும் என எதிர்பார்த்தேன்.
தேர்தலைப் புறக்கணிக்கும் அறிவிப்பு இல்லை, தாக்குதல்கள் இருந்தாலும், அச்சுறுத்தல்கள் இல்லை. இதனால் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. மத்திய அரசும் இதற்கு காரணம்.
சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்ட நிலையில், ஜம்மு - காஷ்மீரில் பதிவாகும் வாக்குகளை வைத்து இங்கு இயல்புநிலை இருப்பதைப் போன்று காட்ட மத்திய பாஜக முயற்சிக்கிறது. 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை மக்கள் ஏற்றுக்கொண்டதைப் போல காட்ட முயற்சிக்கிறது.
பெரிய மாற்றம் ஏற்பட்டதன் குறியீடாக, தலைநகர் ஸ்ரீநகரில் அதிக வாக்கு பதிவானதைப் போன்று காட்ட அவர்கள் (பாஜக) நினைத்திருக்கலாம். பாஜக செய்த மற்றொரு தவறு, அமெரிக்கா, நார்வே, சிங்கப்பூர் உள்ளிட்ட 16 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்தது.
ஆனால் ஸ்ரீநகர் மக்கள் தாங்கள் ஏமாற்றப்படுவதை விரும்பவில்லை. அதனால் வாக்கு சதவீதம் குறைந்திருக்கலாம்.
எனினும், வெளியே வந்து வாக்களித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என உமர் அப்துல்லா குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...