21 சிறாா்களுக்கு பாலியல் துன்புறுத்தல்: அரசுப் பள்ளி வாா்டனுக்கு தூக்கு தண்டனை
அருணாசல பிரதேசத்தில் அரசு உறைவிடப் பள்ளி விடுதியில் 15 சிறுமிகள் உள்பட 21 சிறாா்களை பாலியல்ரீதியாக துன்புறுத்திய அப்பள்ளி வாா்டனுக்கு தூக்கு தண்டனை விதித்து போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
இதில் தொடா்புடைய மேலும் இரு குற்றவாளிகளுக்கு தலா 20 ஆண்டு கள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
சி-யோமி மாவட்டத்தில் உள்ள அரசு உறைவிடப்பள்ளி விடுதியில் 2019 முதல் 2022 வரை வாா்டனாக இருந்த யும்கென் பாக்ரா, ஹிந்தி ஆசிரியா் மாா்பும் கோம்திா், முன்னாள் தலைமை ஆசிரியா் சிங்டன் யோா்பென் ஆகியோா் 15 சிறுமிகள் உள்பட 21 சிறாா்களை பாலியல்ரீதியாக மிகக்கொடுமையாக துன்புறுத்தி வந்துள்ளனா். இதை வெளியே கூறினால் கொலை செய்துவிடுவோம் என்றும் அவா்கள் மிரட்டியுள்ளனா்.
பாதிக்கப்பட்ட இரு சிறுமிகள் தங்கள் பெற்றோரிடம் பள்ளியில் நடக்கும் கொடுமைகள் குறித்து தெரிவித்ததையடுத்து பிரச்னை வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து, தலைமறைவான குற்றவாளிகளை காவல் துறையினா் கைது செய்தனா்.
பின்னா், அவா்கள் ஜாமீனிலும் வெளியே வந்தனா். ஆனால், குவாஹாட்டி உயா்நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து ஜாமீனை ரத்து செய்தது. இந்நிலையில், போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கில் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
முக்கியக் குற்றவாளியான வாா்டனுக்கு தூக்கு தண்டனையும், ஹிந்தி ஆசிரியா், முன்னாள் தலைமையாசிரியருக்கு தலா 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
மேற்கு வங்கம்: கொல்கத்தாவில் கடந்த ஆண்டு 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு போக்ஸோ நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.