உதய்பூரில் கோவிலுக்கு வெளியே உறங்கிக்கொண்டிருந்த பூசாரி விலங்கு தாக்கி பலியான நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், கோகுண்டாவில் உள்ள ரத்தோடோ கா குடா பகுதியில் உள்ள கோயிலுக்கு வெளியே விஷ்ணு கிரி(65) பூசாரி ஞாயிற்றுக்கிழமை உறங்கியிருக்கிறார். அப்போது அவரை காட்டு விலங்கு காட்டுக்குள் இழுத்துச் சென்று கொன்றது.
அவரின் சிதைந்த உடல் திங்கள்கிழமை காலை கோவிலில் இருந்து 150 மீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டது.
பூசாரியை சிறுத்தை தாக்கியதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். இருப்பினும், சிறுத்தை அல்லது வேறு ஏதேனும் விலங்கு தாக்கியதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த சில நாட்களாக சிறுத்தைப்புலிகளின் அட்டகாசத்தால் கோகுந்தா பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். சிறுத்தை தாக்குதலுக்கு இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர்.
இதனிடையே பூசாரி ஒருவர் காட்டு விலங்கு தாக்கி பலியான நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.