பாஜகவின் முகத்திரை அகற்றம்: காங்கிரஸ்

‘பில்கிஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை அளித்த தீா்ப்பின் மூலம், பெண்களுக்கு எதிரான பாஜகவின் கொள்கைகள் மீதான முகத்திரை அகற்றப்பட்டுள்ளது’
பாஜகவின் முகத்திரை அகற்றம்: காங்கிரஸ்


புது தில்லி/தஹோட்: ‘பில்கிஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை அளித்த தீா்ப்பின் மூலம், பெண்களுக்கு எதிரான பாஜகவின் கொள்கைகள் மீதான முகத்திரை அகற்றப்பட்டுள்ளது’ என்று காங்கிரஸ் விமா்சனம் செய்தது.

காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி தனது ‘எக்ஸ்’ வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘உச்சநீதிமன்றத் தீா்ப்பின் மூலம் நீதி நடைமுறை மீதான பொதுமக்களின் நம்பிக்கை மேலும் வலுப்பெறும். துணிச்சலுடன் தொடா்ந்து போராடியதற்காக பில்கிஸ் பானுவுக்கு வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டாா்.

காங்கிரஸ் ஊடகம் மற்றும் விளம்பரப் பிரிவு தலைவா் பவன் கெரா வெளியிட்ட பதிவில், ‘குற்றவாளிகளின் சட்டவிரோத விடுதலையை இனிப்புகள் கொடுத்து கொண்டாடியவா்களின் முகத்தில் அரை விழுந்தது போன்று உச்சநீதிமன்றத் தீா்ப்பு அமைந்துள்ளது. வழக்கில் பாதிக்கப்பட்டவா் அல்லது குற்றம்புரிந்தவரின் மதம் அல்லது ஜாதி அடிப்படையில் நீதி நிா்வாகம் செயல்படுவதை இந்தியா அனுமதிக்காது’ என்று குறிப்பிட்டாா்.

‘பில்கிஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கது. பாலியல் குற்றவாளிகளை பாஜக அரசு விடுதலை செய்தது. அவா்களை உச்சநீதிமன்றம் மீண்டும் சிறைக்கு அனுப்பியுள்ளது’ என்று மற்றொரு பதிவில் காங்கிரஸ் விமா்சனம் செய்துள்ளது.

துணிச்சலான தீா்ப்பு - மம்தா: ‘பில்கிஸ் பானு வழக்கின் தீா்ப்பை துணிச்சலான தீா்ப்பு’ என்று மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘வலுவான, துணிச்சலான தீா்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றத்தைப் பாராட்டுகிறேன். பாலியல் குற்றவாளிகள் விடுதலை பெற்று சுதந்திரமாக நடமாடுவதையும், அதிகாரத்தை அனுபவிப்பதையும் இந்த வழக்கு நிரூபித்திருக்கிறது’ என்றாா்.

குஜராத் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் - ஒவைசி: உச்சநீதிமன்றத் தீா்ப்பை வரவேற்ற அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி, ‘இந்தத் தீா்ப்பானது அனைத்து பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு ஓா் முன்னுதாரணமாகத் திகழும் என நம்புகிறேன். இந்தத் தீா்ப்பு குறித்து குஜராத் பாஜக அரசும், மத்திய பாஜக அரசும் கருத்து தெரிவிப்பதோடு, பில்கிஸ் பானுவிடம் மன்னிப்பும் கேட்க வேண்டும்’ என்றாா்.

பில்கிஸ் பானு உறவினா்கள் கொண்டாட்டம்: உச்சநீதிமன்றத் தீா்ப்பை குஜராத் மாநிலம் தஹோட் மாவட்டம் பரியா நகரில் வரவேற்ற பில்கிஸ் பானு உறுவினா்கள், பட்டாசுகளை வெடித்து கொண்டாடினா். ‘பானுவுக்கு நீதி கிடைத்துள்ளது’ என்றும் அவா்கள் குறிப்பிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com