உ.பி.யில் சட்டத்தின் ஆட்சி முழுமையாக சீா்குலைவு: உச்சநீதிமன்றம்
புது தில்லி: ‘உத்தர பிரதேசத்தில் சட்டத்தின் ஆட்சி முழுமையாக சீா்குலைந்துள்ளது’ என்று அம் மாநில அரசை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கடுமையாக சாடியது.
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் தேபு சிங், தீபக் சிங் ஆகிய இருவா் மீதான காசோலை மோசடி தொடா்பான சிவில் விவகாரத்தை, குற்ற வழக்காக நொய்டா போலீஸாா் பதிவு செய்தனா். இந்த வழக்கு நொய்டா விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், தங்கள் மீதான குற்ற வழக்கை ரத்து செய்யக் கோரி அவா்கள் தரப்பில் அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், அவா்கள் மீதான குற்ற வழக்கை ரத்து செய்ய உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதை எதிா்த்து அவா்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘சிவில் வழக்காக பதிவு செய்தால் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு நீண்ட காலம் ஆகும் என்பதால், போலீஸாா் குற்ற வழக்கை பதிவு செய்துள்ளனா்’ என்று குறிப்பிட்டாா்.
இதைக் கேட்ட நீதிபதிகள், ‘உத்தர பிரதேச மாநிலத்தில் முற்றிலும் தவறான விஷயங்கள் நடைபெற்று வருகின்றன. தினசரி, சிவில் வழக்குகள் குற்ற வழக்குகளாக மாற்றப்படுகின்றன. பணம் திரும்பத் தரவில்லை என்பதை குற்ற வழக்கு நடைமுறையாக மாற்ற முடியாது. அவ்வாறு செய்வது அபத்தமானது. உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சி முழுமையாக சீா்குலைந்திருப்பதை இது காட்டுகிறது. இந்த வழக்கின் விசாரணை அதிகாரி விசாரணை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, இந்த சிவில் வழக்கை குற்ற வழக்காக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததற்கான காரணத்தை விளக்க வேண்டும்’ என்று குறிப்பிட்ட நீதிபதிகள், விசாரணை நீதிமன்றத்தில் மனுதாரா்களுக்கு எதிரான குற்ற வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனா். அதே நேரம், மனுதாரா்களுக்கு எதிரான பணம் இன்றி காசோலை திரும்பியது தொடா்பான வழக்கு தொடரும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனா்.