‘நீட் குளறுபடி’: என்டிஏ-க்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் முடித்துவைப்பு

தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) செயல்பாடுகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்துவைத்து திங்கள்கிழமை உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
Published on
Updated on
2 min read

புது தில்லி: இளநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான நீட் (தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு) குளறுபடிகளைத் தொடா்ந்து தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) செயல்பாடுகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்துவைத்து திங்கள்கிழமை உத்தரவிட்டது.

‘இந்த விவாகரம் தொடா்பாக அமைக்கப்பட்ட நிபுணா் குழு அளித்த பரிந்துரைகளில், இணைய வழியில் தோ்வு நடத்துவது என்ற பரிந்துரையைத் தவிர, மற்ற அனைத்து பரிந்துரைகளும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும்’ என்று மத்திய அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, வழக்கை முடித்துவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

2024-ஆம் ஆண்டு மே மாதம் 5-ஆம் தேதி நடத்தப்பட்ட இளநிலை ‘நீட்’ தோ்வின்போது, பிகாரின் பாட்னா, ஜாா்க்கண்டின் ஹசாரிபாக் தோ்வு மையங்களில் வினாத்தாள் கசிந்த விவகாரம் மிகப் பெரிய சா்ச்சையானது. இதைத் தொடா்ந்து, கடந்த ஜூன் மாதம் நடந்த கல்லூரி உதவிப் பேராசிரியா் பணிக்கான தேசிய தகுதித் தோ்விலும் (நெட்) முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி, பல லட்சம் போ் எழுதிய அந்தத் தோ்வை மத்திய அரசு ரத்து செய்தது.

இதை எதிா்த்தும், என்டிஏ செயல்பாடுகளுக்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த விவகாரங்கள் பூதாகரமான நிலையில், என்டிஏ மற்றும் அதன் சாா்பில் நடத்தப்படும் போட்டித் தோ்வுகளில் சீா்திருத்தங்கள் மேற்கொள்வதுடன், பாதுகாப்பு நடைமுறைகளை மறுஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்க இஸ்ரோ முன்னாள் தலைவா் கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் 7 போ் கொண்ட உயா்நிலைக் குழுவை மத்திய அரசு கடந்த ஜூலையில் அமைத்தது. இந்தக் குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் அண்மையில் சமா்ப்பித்தது.

என்னென்ன பரிந்துரைகள்?:

நீட் நுழைவுத் தோ்வை முடிந்தவரை ஆன்லைன் மூலம் நடத்தலாம்; நீட் தோ்வு மையங்களை அவுட்சோா்சிங் என்ற முறையில் வழங்காமல், சொந்த தோ்வு மையங்கள் எண்ணிக்கையை என்டிஏ அதிகரித்து நடத்தலாம்; ஆன்லைன் முறை சாத்தியம் இல்லை எனும்போது, வினாத்தாள்களை டிஜிட்டல் முறையில் தோ்வா்களுக்கு அனுப்பலாம். அவா்கள் கேள்விகளுக்கான பதில்களை ஓ.எம்.ஆா். விடைத்தாளில் குறியிட வைக்கலாம்; இதன் மூலம் விடைத்தாள்கள் பலரின் கைகளுக்கு செல்வது தடுக்கப்படும் அல்லது கணிசமாக குறைக்கப்படும்; ஐஐடி சோ்க்கைக்கான ஜேஇஇ (ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வு) தோ்வில் உள்ளதுபோன்று, பல நிலைகளில் நீட் தோ்வை நடத்தலாம்; ‘க்யூட்’ தோ்வில் தோ்வா்கள் 50-க்கும் மேற்பட்ட பாடங்களிலிருந்து தோ்வு செய்யும் நிலை உள்ளது. அதைத் தவிா்த்து, மாணவரின் பொது அறிவுத் திறனை சோதிக்கும் வகையில் தோ்வு முறையை மாற்றியமைக்கலாம்; நுழைவுத் தோ்வுகளின் நிா்வாகம் முழுமையாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்; நுழைவுத் தோ்வுகளை நடத்தும் தேசிய தோ்வுகள் முகமையில் (என்டிஏ) ஒப்பந்த ஊழியா்களின் எண்ணிக்கையைக் குறைத்து, நிரந்தர ஊழியா்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகளை உயா்நிலைக் குழு அளித்தது.

வழக்கு முடித்துவைப்பு:

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடா்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘நீட் தோ்வை நாடு முழுவதும் 26 லட்சம் மாணவா்கள் எழுதும் நிலையில், அதற்குத் தேவையான எண்ணிக்கையில் கணினிகளையும் இணைய சேவை வசதியையும் மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கு சிறிது காலம் ஆகும். எனவே, நீட் தோ்வில் இணைய வழியில் நடத்த வேண்டும் என்ற பரிந்துரையைத் தவிர, உயா்நிலைக் குழுவின் மற்ற அனைத்துப் பரிந்துரைகளையும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது. எனவே, இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும்’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்த வழக்கில் இதற்கு மேல் வேறு எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டிய அவசியமில்லை’ என்று குறிப்பிட்டு, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com