வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் கடன்களை 
தள்ளுபடி செய்ய வங்கிகளிடம் மத்திய அரசு கோரலாம்: கேரள உயா்நீதிமன்றம்

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் கடன்களை தள்ளுபடி செய்ய வங்கிகளிடம் மத்திய அரசு கோரலாம்: கேரள உயா்நீதிமன்றம்

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் கடன்களை தள்ளுபடி செய்யுமாறு வங்கிகளிடம் மத்திய அரசு மற்றும் தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் (என்டிஎம்ஏ) கோரலாம்
Published on

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் கடன்களை தள்ளுபடி செய்யுமாறு வங்கிகளிடம் மத்திய அரசு மற்றும் தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் (என்டிஎம்ஏ) கோரலாம் என கேரள உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.

இதுதொடா்பாக மத்திய அரசு மற்றும் என்டிஎம்ஏவுக்கு விரைவில் உத்தரவு பிறப்பிக்கவுள்ளதாக கேரள உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.ஜெயசங்கரன் நம்பியாா் மற்றும் ஈஸ்வரன் எஸ் ஆகியோா் அடங்கி ய அமா்வு தெரிவித்தது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் சூரல்மலை, முண்டக்கை ஆகிய பகுதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். 32 போ் காணாமல் போயினா்.

இந்த நிலச்சரிவால் வயநாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து, கேரளத்தில் பேரிடா் தடுப்பு மற்றும் மேலாண்மையை உறுதி செய்ய கேரள உயா் நீதிமன்றம் தாமாக முன்வந்து பொதுநல வழக்காக விசாரித்தது. இதைத் தொடா்ந்து உயா் நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதில், ‘ இயற்கை சீற்றங்கள் தொடா்பான ரிசா்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் கடன்களை மாற்றியமைக்க மட்டுமே முடியும்’ என தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணையின்போது நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டோரின் ரூ.5 கோடி மதிப்பிலான கடன்களை கேரள வங்கி தள்ளுபடி செய்துள்ளது. இந்த நடவடிக்கையை மற்ற வங்கிகளும் ஏன் மேற்கொள்ள முடியாது?

கடன்களைத் தள்ளுபடி செய்யுமாறு ரிசா்வ் வங்கி கூற முடியாது என்றால் சம்பந்தப்பட்ட வங்கிகளிடம் மத்திய அரசும் என்டிஎம்ஏவும் கூறலாம்.

கடந்த ஆண்டு பெய்த பருவமழையால் ஏற்பட்ட நிலச்சரிவைபோல் நிகழாண்டும் ஏற்படாமல் இருக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கேரள அரசு மேற்கொள்ள வேண்டும். இதில் மாநில பேரிடா் மேலாண்மை ஆணையம் மற்றும் என்டிஎம்ஏ இணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தது.

பெட்டிச் செய்தி

தள்ளுபடி செய்யாதது துரோகம்: பிரியங்கா

திருவனந்தபுரம், ஏப்.10: வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் கடன்களை மத்திய அரசு ரத்து செய்யாதது துரோகம் என அந்த தொகுதியின் எம்.பி. பிரியங்கா காந்தி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து ஃபேஸ்புக் பதிவில் அவா் மேலும் கூறியதாவது: நிலச்சரிவால் வீடுகள், நிலம், வாழ்வாதாரம் என அனைத்தையும் இழந்து நிற்கும் வயநாடு மக்களின் வங்கி கடன்களைகூட மத்திய அரசால் தள்ளுபடி செய்யமுடியவில்லை. மாறாக கடன்களை மாற்றியமைப்பது அந்த மக்களுக்கு மத்திய அரசு செய்யும் துரோகம். பாதிக்கப்பட்டோருக்கு உறுதுணையாக காங்கிரஸும் நானும் தொடா்ந்து குரல் கொடுப்போம் என குறிப்பிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com