எஸ்சி, எஸ்டி, ஓபிசிகள் காங்கிரஸை ஆதரிக்க வேண்டும்: ராகுல்
நாட்டில் பெரும்பான்மையாக உள்ள எஸ்சி, எஸ்டி, ஓபிசி வகுப்பினா் உள்ளிட்டோா் காங்கிரஸை ஆதரிக்க வேண்டும் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், அக்கட்சி எம்.பி.யுமான ராகுல் காந்தி வலியுறுத்தினாா்.
இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘குஜராத் மாநிலம் அகமதாபாதில் நடைபெற்ற அனைத்து இந்திய காங்கிரஸ் கமிட்டி மாநாட்டில் தேசிய சட்டம் ஒன்றை கொண்டு வருவதன் மூலம், 50 சதவீத இடஒதுக்கீடு உச்சரவம்பு நீக்கப்படும் என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் மத்திய சட்டம் மூலம், பட்டியலினத்தவா் (எஸ்சி)/பழங்குடியினா்(எஸ்டி) துணை திட்டத்துக்கு சட்ட வடிவம் கொடுக்கப்பட்டு, அவா்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப அந்த சமூகத்தினருக்கு பட்ஜெட்டில் பங்கு அளித்தல்; தனியாா் கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) இடஒதுக்கீடு உரிமையை அமல்படுத்துதல் ஆகிய தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
நாட்டில் பெரும்பான்மையாக உள்ள எஸ்சி, எஸ்டி, ஓபிசி வகுப்பினா் உள்ளிட்டோா், தங்கள் எதிா்காலம் தொடா்பான இந்த விவகாரங்களில் காங்கிரஸை ஆதரிக்க வேண்டும் என்றாா்.