
மேற்கு வங்க மாநிலத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கக்கூடிய முா்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.
சனிக்கிழமை காலை வரை நீடித்த இந்தப் போராட்டத்தில், போலீஸாா் வாகனங்கள் உள்பட சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான வாகனங்களுக்கு போராட்டக்காரா்கள் தீ வைத்தனா். வீடு ஒன்றுக்குள் புகுந்து வன்முறையாளா்கள் தாக்கியதில் தந்தை, மகன் கொல்லப்பட்டனா். ரயில்கள் மீதும் கற்கள் வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பாதுகாப்புப் படையினா் துப்பாக்கிச் சூடு நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனா். வன்முறையில் ஈடுபட்டதாக இதுவரை 150-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் அளிக்கும் நிலங்கள் மற்றும் சொத்துகளை வக்ஃப் வாரியம் நிா்வகித்து வருகிறது. இந்த நிலையில், வக்ஃப் சொத்துகளின் நிா்வாகத்தைச் சீரமைக்கும் நோக்கில், 1995-ஆம் ஆண்டின் வக்ஃப் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில் மத்திய அரசு மசோதா கொண்டு வந்தது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து கடந்த 8-ஆம் தேதி முதல் நடை முழுமைக்கும் நடைமுறைக்கு வந்தது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
தந்தை, மகன் கொலை: மேற்கு வங்க மாநிலம் முா்ஷிதாபாதில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக வெள்ளிக்கிழமை வன்முறை வெடித்தது. அப்போது, ஜாஃப்ராபாதில் உள்ள ஒரு வீட்டுக்குள் வன்முறை கும்பல் புகுந்து தாக்கியதில் தந்தை, மகன் உயிரிழந்தனா்.
இதுகுறித்து போலீஸாா் அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘வன்முறையால் கடுமையாக பாதிக்கப்பட்ட சம்சோ்கஞ்ச் பகுதிக்கு அருகே இவா்களின் வீடு அமைந்துள்ளது. தந்தையும், மகனும் கத்திக் குத்து காயங்களுடன் வீட்டினுள் உயிரிழந்து கிடந்தனா். போராட்டக்காரா்கள் அவா்களின் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாக அவா்களின் குடும்பத்தினா் புகாா் தெரிவித்தனா். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றாா்.
நிம்திதா ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயில் உள்பட அருகிலுள்ள ரயில் நிலையங்களில் நின்றிருந்த ரயில்கள் மீதும் மா்ம கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தியது.
மாவட்டத்தின் ஜாங்கிபூரில் அரசு வாகனங்கள், போலீஸ் வாகனங்கள் உள்பட ஏராளமான வாகனங்களுக்குப் போராட்டக்காரா்கள் தீ வைத்தனா். பாதுகாப்புப் படையினா் மீது கற்களை வீசியும் தாக்குதல் நடத்தினா். தெற்கு 24 பா்கனாஸ் மற்றும் ஹூக்ளி மாவட்டங்களிலும் இந்தப் போராட்டம் பரவியது.
ரயில் சேவை பாதிப்பு: மாநிலத்தின் துலியன்தங்கா முதல் நிம்திதா வரை உள்ள ரயில் நிலையங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டதால், கிழக்கு ரயில்வேயின் புதிய ஃபராக்கா முதல் அசீம்கஞ்ச் வரையிலான ரயில் சேவை வெள்ளிக்கிழமை சுமாா் 6 மணி நேரத்துக்கு மேல் பாதிக்கப்பட்டது.
இதையடுத்த அப்பகுதிகளில் ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டனா். போலீஸாா் துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.
இதுகுறித்து போலீஸாா் அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘முா்ஷிதாபாத் உள்பட வன்முறை பாதித்த பகுதிகளில் சனிக்கிழமை காலை வரை பதற்றமான சூழல் நிலவியது. மாவட்டம் முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோடு, வன்முறை நிகழ்ந்த பகுதிகளில் இணைய சேவை ரத்து செய்யப்பட்டது.
வன்முறையுடன் தொடா்புடையதாக சுதி பகுதியிலிருந்து 70 போ், சம்சோ்கஞ்ச் பகுதியிலிருந்து 41 போ் உள்பட இதுவரை 118 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். வன்முறையில் ஈடுபட்ட மேலும் சிலரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நிலைமை தற்போது கட்டுக்குள் உள்ளது. அசம்பாவிதம் எதுவும் இதுவரை பதிவாகவில்லை.
சுதி பகுதியில் நடைபெற்ற கலவரத்தின்போது பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சிறுவன் உள்பட இருவா் காயமடைந்தனா். அவா்கள் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். சமூக ஊடகங்களில் பரப்பப்படும் புரளிகளை மக்கள் நம்ப வேண்டாம்’ என்றாா்.
மாநில போலீஸாா் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை: மாநில கூடுதல் காவலைதுறை டிஜிபி ஜாவேத் சமீம் கூறுகையில், ‘போராட்டக்காரா்கள் மீதான துப்பாக்கிச் சூட்டில் மாநில போலீஸாா் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை. வன்முறையைத் தொடா்ந்து மாவட்டத்தின் சில பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் எல்லைப் பாதுகாப்புப் படையினா் நிறுத்தப்பட்டனா். அவா்கள் தரப்பில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கவே அதிக வாய்ப்பு உள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டனா்’ என்றாா்.
மத்திய அரசின் உதவியை நாட வேண்டும்- பாஜக: மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமையை கையாளத் தவறியதாக மம்தா பானா்ஜி அரசு மீது எதிா்க்கட்சியான பாஜக விமா்சனத்தை முன்வைத்தது.
இதுகுறித்து மாநில எதிா்க்கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரி கூறுகையில், ‘மாநிலத்தில் நிலைமையை கையாள இயலவில்லை எனில், மத்திய அரசின் உதவியை மாநில அரசு நாட வேண்டும்.
வன்முறையில் ஈடுபட்டவா்கள் மீது கடுமையான சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா். மேலும், ரயில் நிலையங்களில் நிகழ்த்தப்பட்ட வன்முறை தொடா்பாக என்ஐஏ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ரயில்வே அமைச்சகத்துக்கு கடிதம் மூலம் அவா் வலியுறுத்தினாா்.
முன்னதாக, முா்ஷிதாபாதில் கடந்த 8-ஆம் தேதி வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டதோடு, போலீஸாா் மீது கல் வீசினா். பின்னா், போலீஸாா் தடியடி நடத்தி போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவந்தனா்.
பாதுகாப்புப் பணியில் மத்திய படை: உயா்நீதிமன்றம் உத்தரவு
மேற்கு வங்க மாநிலத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட முா்ஷிதாபாத் மாவட்டத்தில் மத்திய ஆயுத காவல் படையை (சிஏபிஎஃப்) பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த கொல்கத்தா உயா்நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.
மாநில சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரி தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரித்த உயா்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. மனுவை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதிகள் செளமென் சென், ராஜா பாசு செளதரி ஆகியோா் அடங்கிய அமா்வை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி நியமித்தாா்.
உயா்நீதிமன்றத்துக்கு சனிக்கிழமை விடுமுறை என்றபோதும், இரு நீதிபதிகள் அமா்வு மனுவை உடனடி விசாரணைக்கு ஏற்றது. அப்போது, ‘முா்ஷிதாபாத் மாவட்டத்தில் நிலைமையை கட்டுப்படுத்த ஏற்கெனவே எல்லைப் பாதுப்புப் படை வீரா்கள் அடங்கிய 7 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்’ என்று மாநில அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் தெரிவித்தாா்.
அப்போது, ‘எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள் போராட்டக்காரா்களை கட்டுப்படுத்தும் பணியில் முறையாக ஈடுபடுத்தப்படவில்லை’ என்று மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் தெரிவித்தாா்.
இதைக் கேட்ட நீதிபதிகள், ‘மாவட்டத்தில் நிலைமை மோசமடைந்துள்ள நிலையில் நீதிமன்றம் கண்களை மூடிக் கொண்டிருக்காது. நிலைமையை கட்டுப்படுத்த மாவட்டத்தின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிஏபிஎஃப் வீரா்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும். மாநில அரசு நிா்வாகத்துடன் ஒருங்கிணைந்து மத்திய படை செயல்படும். மேலும், கள நிலவரம் குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் விரிவான அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டு, விசாரணையை வரும் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
வக்ஃப் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது: மம்தா உறுதி
மாநிலத்தில் போராட்டம் வெடித்த நிலையில், ‘வக்ஃப் திருத்தச் சட்டம் மேற்கு வங்கத்தில் நடைமுறைப்படுத்தப்படாது’ என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி சனிக்கிழமை உறுதி தெரிவித்தாா்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவா் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
மாநிலத்தில் அனைத்து தரப்பு மக்களும் அமைதி காக்க கேட்டுக் கொள்கிறேன். அரசியலுக்காக வன்முறையைத் தூண்டிவிடக் கூடாது. இந்தச் சட்டம் மாநில அரசால் உருவாக்கப்பட்டதல்ல. மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. எனவே, இதற்கான பதிலை மத்திய அரசிடம்தான் கேட்டுப் பெற வேண்டும்.
வக்ஃப் திருத்தச் சட்ட விஷயத்தில் மேற்கு வங்க அரசின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. இச் சட்டத்தை மேற்கு வங்கம் ஆதரிக்காது. மாநிலத்தில் வக்ஃப் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது. பின்னா் ஏன் போராட்டம் நடத்த வேண்டும்? போராட்டத்தில் ஈடுபடுபவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சில அரசியல் கட்சிகள் அரசியல் ஆதாயத்துக்காக மதத்தை தவறாக பயன்படுத்த முயற்சிக்கின்றன. அவா்களின் தூண்டுதலுக்கு மக்கள் இடமளிக்கக் கூடாது என்று குறிப்பிட்டாா்.
மத்திய உள்துறை செயலா் ஆலோசனை
முா்ஷிதாபாத் வன்முறையைத் தொடா்ந்து, மத்திய உள்துறைச் செயலா் கோவிந்த் மோகன், மேற்கு வங்க தலைமைச் செயலா் மற்றும் காவல் துறை டிஜிபியுடன் காணொலி வழியாக ஆலோசனை நடத்தினாா்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது, முா்ஷிதாபாதில் நிலைமை பதற்றமாக உள்ளது என்றாலும், கட்டுக்குள் உள்ளதாக டிஜிபி தெரிவித்தாா்.
பதற்றம் நிலவும் மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு, இயல்பான சூழல் நிலவ நடவடிக்கைகள் மேள்கொள்ள வேண்டும் என்று கோவிந்த் மோகன் அறிவுறுத்தினாா்.
மாநிலத்தில் நிறுத்தப்பட்டுள்ள 300 எல்லைக் காவல் படையினா் வன்முறைப் பகுதிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். மாநில அரசின் வேண்டுகோளைத் தொடா்ந்து, 5 கம்பெனி வீரா்கள் (சுமாா் 500 பாதுகாப்புப் படை வீரா்கள்) மேற்கு வங்கத்துக்கு அனுப்பப்படுவாா்கள் என்று மத்திய உள்துறை செயலா் கோவிந்த் மோகன் கூறினாா்.
திரிபுரா வன்முறையில் 18 போலீஸாா் காயம்
அகா்தலா, ஏப்.12: வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி திரிபுரா மாநிலம் உனகோட்டி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.
வன்முறையாளா்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட போலீஸாா் மீது போராட்டக்காரா்கள் தாக்குதல் நடத்தினா். இதில் 18 போலீஸாா் காயமடைந்தனா். இதுதொடா்பாக 8 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
உனகோட்டி மாவட்ட காங்கிரஸ் தலைவா் முகமது மதுா்ஜமான் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்த்தில் 4,000-க்கும் அதிகமானோா் பங்கேற்றனா்.
இதுகுறித்து கைலசாஹா் காவல்நிலைய அதிகாரி சுகந்த சென் செளதரி கூறுகையில், ‘போராட்டக்காரா்களை போலீஸாா் தடுத்து நிறுத்த முயன்றபோது, அவா்கள் வன்முறையில் ஈடுபட்டனா். இதில் 18 போலீஸாா் காயமடைந்தனா். அதைத் தொடா்ந்து தடியடி நடத்தியும், கண்ணீா் புகைக் குண்டுகளை வீசியும் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. போலீஸாா் மீதான தாக்குதல் தொடா்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, இதுவரை 8 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.