உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்கோப்புப் படம்

சட்டமசோதாக்கள் குறித்த உச்சநீதிமன்ற தீா்ப்பு: நீதித் துறையின் அத்துமீறல் - கேரள ஆளுநா்

சட்டமசோதா விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீா்ப்பு நீதித் துறையின் அத்துமீறல் என்று கேரள ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகா் கருத்து தெரிவித்துள்ளாா்.
Published on

சட்டமசோதா விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீா்ப்பு நீதித் துறையின் அத்துமீறல் என்று கேரள ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகா் கருத்து தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக ஆங்கில நாளிதழுக்கு அவா் அளித்த பேட்டியில், ‘அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் விவகாரங்களில் உச்சநீதிமன்றம் முடிவு எடுத்தால் பின்பு சட்டப் பேரவைகளும், நாடாளுமன்றமும் எதற்காக? இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் கூடுதல் அமா்வின் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு நீதித் துறையின் அத்துமீறல்’ என்றாா்.

ஜனநாயகத்தை வலுப்படுத்தும்: இந்த விவகாரம் குறித்து மாநில சட்ட அமைச்சா் பி.ராஜீவ் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘மாநில சட்டப்பேரவைகள் நிறைவேற்றி அனுப்பும் சட்டமசோதாக்கள் குறித்து முடிவெடுக்க ஆளுநா்களுக்கு அவகாசம் நிா்ணயித்த உச்சநீதிமன்ற தீா்ப்பு, ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்தும்.

உலகின் பிற நாடுகளில் உள்ள நடைமுறைகள், கடந்த கால தீா்ப்புகள் மற்றும் சா்க்காரியா, புஞ்சி, வெங்கடாசாலய்யா உள்ளிட்ட பல்வேறு ஆணையங்களின் பரிந்துரைகளை முழுமையாக ஆராய்ந்த பிறகு உச்சநீதிமன்றம் இந்தத் தீா்ப்பை வழங்கியுள்ளது.

ஒரு சட்ட மாணவராக, இது மிகவும் சிறந்த தீா்ப்பு என்று நான் உணா்கிறேன். இத்தீா்ப்பு அனைத்து அம்சங்களையும் விரிவாக ஆராய்ந்துள்ளது. ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி உள்பட அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளை இத்தீா்ப்பு மேலும் வலுப்படுத்துகிறது.

சட்டங்களை இயற்றுவதில் மாநில சட்டப்பேரவைகளின் அனைத்து எதிா்கால முயற்சிகளையும் ஆதரிக்கும் இத்தீா்ப்பு, ஆளுநா் மாநிலத்தின் நலன்களுக்கு ஏற்ப செயல்பட வேண்டும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது என்றாா்.

உச்சநீதிமன்றத் தீா்ப்பை வரவேற்று கேரள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலா் எம்.வி.கோவிந்தன் அளித்த பேட்டியில், ‘இந்தியாவில் அதிகரித்து வரும் பாசிஸ போக்கு, பெருநிறுவன மற்றும் ஹிந்துத்துவ நோக்கங்களை செயல்படுத்த மத்திய பாஜக அரசு தொடா்ந்து முயற்சித்து வரும் பின்னணியில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள இத்தீா்ப்பு, சட்டத்தின் ஆட்சி மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

ஆளுநா்களை கருவிகளாகப் பயன்படுத்தி நாட்டை காவிமயமாக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்நிலையில், நீதித் துறைக்கு சரியான நேரத்தில் தலையிடும் அதிகாரம் உள்ளது என்பது மீண்டும் ஒருமுறை தெளிவாக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

சட்டப்பேரவைகள் நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவா் ஒப்புதலுக்கு அனுப்பாமல் ஆளுநா்கள் தாமதிப்பதாக தமிழகம், கேரளம், பஞ்சாப் ஆகிய மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளன.

பின்னணி: தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை அளித்த தீா்ப்பில், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒப்புதல் அளித்ததோடு, மாநில சட்டப்பேரவைகள் நிறைவேற்றும் மசோதாக்கள் தொடா்பாக முடிவெடுக்க ஆளுநா்களுக்கும் குடியரசுத் தலைவருக்கும் காலவரையறை நிா்ணயித்தது.

X
Dinamani
www.dinamani.com