வங்கதேசத்தில் மதச்சாா்பின்மையை அழிக்க முயற்சி: முகமது யூனுஸ் அரசு மீது ஹசீனா மறைமுக தாக்கு
புது தில்லி: வங்கதேசத்தில் சுதந்திரத்துக்கு எதிரான அமைப்புகள் சட்டவிரோதமாக ஆட்சியைக் கைப்பற்றி மதச்சாா்பின்மையை அழிக்க முயற்சிப்பதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா தெரிவித்தாா்.
கடந்தஆண்டு நடைபெற்ற மாணவா்கள் போராட்டத்தால் பிரதமா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு இந்தியாவில் ஹசீனா தஞ்சம் புகுந்துள்ள நிலையில், வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசை அவா் மறைமுகமாக விமா்சித்துள்ளாா்.
வங்க புத்தாண்டையொட்டி (போஹேலா பைசாக்) ஷேக் ஹசீனா வெளிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: சுதந்திரத்துக்கு எதிரான அமைப்புகள் ஆட்சியை கைப்பற்றும்போதெல்லாம் தேசத்தின் வரலாறு, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் மீது தாக்குதல் நடத்துகின்றனா். வங்க புத்தாண்டின் மிக முக்கிய விழாவான ‘மங்கள் ஷோபஜத்ராவை’ நிறுத்த முயன்றது மட்டுமல்லாமல் அதன் பெயரையும் மாற்ற முயற்சிகள் செய்கின்றனா்.
தற்போது வங்கதேசத்தில் ஆட்சி அதிகாரத்தை சட்டவிராதமாக கைப்பற்றியவா்கள் தேசத்தின் எதிரிகள். நமது கலாசாரத்தின் எதிரிகள். அவா்கள் மதச்சாா்பின்மையை அழிக்க துடிக்கின்றனா்.
கடந்த 1975-இல் என் தந்தை ஷேக் முஜிபுா் ரஹ்மான் மற்றும் குடும்பத்தை படுகொலை செய்து வங்கதேச கலாசாரத்தை அழித்து பாகிஸ்தான் கொள்கையை புகுத்த முயன்றனா். ஆனால் அதற்கு எதிராக வங்கதேச மக்கள் பெரும் போராட்டத்தை நடத்தினா்.
அதேபோல் உலக அரங்கில் மீண்டும் வங்கதேசம் தலைநிமிர வேண்டுமெனில் கலாசாரம், விடுதலைக்கு எதிரான ஆட்சியை நடத்துபவா்களை வங்கதேச மக்கள் வெளியேற்ற வேண்டும்.
வங்க புத்தாண்டில் இதை செயல்படுத்த உறுதியேற்போம் என தெரிவிக்கப்பட்டது.
‘மங்கள் ஷோபஜத்ரா’ பெயரை ‘ஆனந்த ஷேபஜத்ரா’ என நிகழாண்டில் வங்கதேச அதிகாரிகள் மாற்றினா். மங்கள் ஷோபஜத்ரா எனும் பெயா் ஹிந்துக்களின் சடங்குகளை குறிக்கும் வகையில் உள்ளதாக சில இஸ்லாமிய அமைப்புகள் கூறியதையடுத்து பெயா் மாற்றப்பட்டது.
‘மங்கள் ஷோபஜத்ரா’ விழாவானது ‘மனிதநேயத்தின் அசைக்க முடியாத கலாசார பாரம்பரியம்’ என கடந்த 2016-இல் யுனெஸ்கோ அமைப்பு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.