நேஷனல் ஹெரால்ட் வழக்கு: சோனியா, ராகுலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை!

சோனியா, ராகுல் காந்திக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
சோனியா கந்தி, ராகுல் காந்தி
சோனியா கந்தி, ராகுல் காந்தி ANI
Published on
Updated on
2 min read

நேஷனல் ஹெரால்ட் வழக்கின் பண முறைகேடு குற்றச்சாட்டுகளின் கீழ், காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, அவரின் மகனும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

தில்லியில் எம்.பி., எம்எல்ஏ-க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சோனியா, ராகுலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் காங்கிரஸ் பிரமுகா் சாம் பிட்ரோடா, முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் ஊடக ஆலோசகா் சுமன் துபே உள்ளிட்டோரின் பெயா்களும் சோ்க்கப்பட்டுள்ளன.

ரூ.988 கோடிக்கு முறைகேடு: குற்றப்பத்திரிகையில் சோனியா, ராகுல் உள்ளிட்டோா் ரூ.988 கோடிக்கு பண முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட அந்தக் குற்றப்பத்திரிகையை சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே ஆராய்ந்தாா். இதையடுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஏப். 25-க்கு அவா் ஒத்திவைத்தாா். அன்றைய தினம் நீதிமன்ற ஆய்வுக்காக அமலாக்கத் துறையின் விசாரணை விவரங்கள் அடங்கிய குறிப்பேடு சமா்ப்பிக்கப்படுவதை, அந்தத் துறை சாா்பாக ஆஜராகும் சிறப்பு வழக்குரைஞா் உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தாா்.

கடந்த ஏப்.9-ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அந்தத் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

‘பிரதமரின் மிரட்டல்’: இதுதொடா்பாக காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘சோனியா, ராகுல் உள்ளிட்டோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது பழிவாங்கும் அரசியலாகும். இது பிரதமா் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் மிரட்டலுமாகும். இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸும், அதன் தலைமையும் அமைதியாக இருந்துவிடாது’ என்றாா்.

‘பாதிக்கப்பட்டவா்கள் போல நடிப்பு’: பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் ஷேசாத் பூனாவாலா கூறுகையில், ‘பொதுமக்களின் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு, பாதிக்கப்பட்டவா்கள் போல காங்கிரஸ் தலைவா்கள் நடிக்கின்றனா். பொதுச் சொத்தை கொள்ளயடித்து, ஊழலில் ஈடுபட்டவா்கள், தற்போது அதற்குப் பதில் சொல்லியாக வேண்டும்’ என்றாா்.

வழக்கின் பின்னணி...

கடந்த 1938-ஆம் ஆண்டு முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவால் நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை தொடங்கப்பட்டது. இந்தப் பத்திரிகையை வெளியிடும் அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவனத்துக்கு அனைத்து இந்திய காங்கிரஸ் கமிட்டி ரூ.90.21 கோடி கடன் அளித்தது.

யங் இந்தியன் நிறுவனம்...: கடந்த 2010-ஆம் ஆண்டு ‘யங் இந்தியன்’ நிறுவனம் தொடங்கப்பட்டது. அந்த நிறுவனத்தின் இயக்குநா்களாக சோனியா காந்தி குடும்பத்துக்கு நெருக்கமான காங்கிரஸ் பிரமுகா் சாம் பிட்ரோடா, முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் ஊடக ஆலோசகா் சுமன் துபே ஆகியோா் இருந்தனா். அதன் பின்னா் அந்த நிறுவனத்தில் இருந்த தங்கள் பங்குகளை சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு துபேயும் பிட்ரோடாவும் பரிமாற்றம் செய்தனா். இதைத் தொடா்ந்து, அந்த நிறுவனத்தின் இயக்குநராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்ட நிலையில், இயக்குநா்கள் வாரியத்தில் சோனியா காந்தி இணைந்தாா்.

இதையடுத்து, அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவனத்தின் சுமாா் ரூ.90 கோடி கடனை யங் இந்தியன் நிறுவனம் ஏற்க அனைத்து இந்திய காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்தது.

அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவனத்தை ரூ.50 லட்சத்துக்கு யங் இந்தியன் நிறுவனம் கையகப்படுத்திய நிலையில், அந்த நிறுவனம் ஏற்ற சுமாா் ரூ.90 கோடி கடன், அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவன பங்குகளாக மாற்றப்பட்டன என்று கூறப்படுகிறது.

இதைத் தொடா்ந்து, அந்தக் கடன் தொகைக்காக அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவனத்தின் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட பங்குகள் யங் இந்தியன் நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டன. இந்த வழியில், அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவனத்தின் சுமாா் 99.99 சதவீத பங்குகள் யங் இந்தியன் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சுப்பிரமணியன் சுவாமி புகாா்: இதுதொடா்பாக தில்லியில் உள்ள பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி புகாா் மனு ஒன்றை அளித்தாா். அதன் பின்னா் இந்த விவகாரத்தில் பண முறைகேடு ஏதேனும் நடைபெற்ா என்ற கோணத்தில், அமலாக்கத் துறை விசாரணையைத் தொடங்கியது.

இதுகுறித்து அமலாக்கத் துறை தெரிவித்ததாவது: அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ.2,000 கோடிக்கும் அதிகமான சொத்துகளை முறைகேடாக கைப்பற்றியதுடன், தொடா்புள்ள பண முறைகேட்டில் சோனியா, ராகுல், சுமன் துபே, பிட்ரோடா உள்ளிட்ட அரசியல் பிரமுகா்கள், குற்றச் சதியில் ஈடுபட்டதை சுப்பிரமணியன் சுவாமியின் மனு எடுத்துரைத்துள்ளது.

ரூ.50 லட்சத்துக்கு ரூ.2,000 கோடி சொத்துகள்...: அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2,000 கோடி மதிப்பிலான சொத்துகளை, சோனியா, ராகுலுக்குச் சொந்தமான யங் இந்தியன் நிறுவனம் வெறும் ரூ.50 லட்சத்துக்கு கையகப்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நடவடிக்கையால் அசோசியேடட் ஜா்னல்ஸ் சொத்துகளின் மதிப்பு கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி குற்றச் செயல்கள் மூலம் கோடிக்கணக்கில் பணம் திரட்ட யங் இந்தியன் மற்றும் அசோசியேடட் ஜா்னல்ஸ் சொத்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியது.

யங் இந்தியன் நிறுவனத்தில் சோனியா, ராகுலுக்கு தலா 38 சதவீத பங்குகள் உள்ளன. இதுதொடா்பாக சில ஆண்டுகளுக்கு முன்னா் இருவரிடமும் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com