
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் இந்திய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலுக்குக் காரணமான பயங்கரவாத குழுவை வேரோடு ஒழிக்க முழு பலத்தையும் மத்திய அரசு பயன்படுத்த வேண்டும் என்றும், இது குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
ஜம்மு - காஷ்மீரின் சுற்றுலா நகரமான பஹல்காமின் பைசாரன் பள்ளத்தாக்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமையன்று (ஏப். 22) சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் சரமாரியாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து பெங்களூரில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது,
'’இந்த இக்கட்டான சூழலில் அரசுக்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும். தீவிரவாதம் போன்ற நமக்கு எதிராக செயல்படும் அனைத்து சக்திகளையும் அரசுடன் இணைந்து எதிர்க்க வேண்டும். அவர்கள் தீவிரவாதிகளோ? அல்லது வேறு அமைப்பைச் சேர்ந்தவர்களோ? நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்காக நாம் இணைந்து நிற்க வேண்டும்.
சம்பவம் நடந்து 22 மணிநேரம் ஆகிறது. ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி, சுற்றுலாப் பயணிகள் மற்றும் மக்களின் அச்சத்தை போக்கும் வகையிலான சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
இது ஒட்டுமொத்த இந்தியாவின் மீது நடத்தப்பட்ட தாக்குதல். நாடு முழுவதும் அதிர்ச்சி அலை இன்னும் ஓயவில்லை. இந்த நேரத்தில் நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். உண்மையுடன் எதிர்க்க வேண்டும். முறையற்ற திட்டமிடலுடன் தற்காலிக தீர்வை நோக்கி நகர்ந்துவிடக் கூடாது. தீவிரவாதிகளின் இந்தக் கோழைத்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இன்னும் சில நாள்களில் அமர்நாத் யாத்திரை தொடங்கவுள்ளது. கடந்த காலகட்டத்தில் இதேபோன்ற சம்பவம் யாத்திரையின்போதும் நடைபெற்றது. மாநில அரசுகள் மத்திய அரசுடன் இணைந்து தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
பெஹல்காம் தாக்குதலால் ஜம்மு - காஷ்மீரின் பொருளாதாரத்துக்கு சீர்குலைவு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா என்னிடம் குறிப்பிட்டார். மக்கள் அச்சத்திலிருந்து மீள்வதற்கு நீண்ட காலம் ஆகலாம். ஆனால், அவர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமை.
இதுபோன்ற நேரத்தில் அந்த அரசு இதைச் செய்தது. இந்த அரசு இதைச் செய்தது என்று கூறி விலகி நிற்பதைவிட, இணைந்து செயல்படுவதே ஆரோக்கியமானதாக இருக்கும். அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து செயல்பட காங்கிரஸ் தயாராக உள்ளது’’ எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | பெஹல்காம்: 35 தமிழர்கள் தில்லி திரும்பினர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.