வீடுகள் இடிப்பு மனிதத்தன்மையற்றது: உ.பி. அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் வீடுகள் இடிக்கப்பட்டது மனிதத்தன்மையற்றது, சட்டவிரோதம் என உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கண்டனம் தெரிவித்தது.
இடிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டின் உரிமையாளருக்கும் பிரயாக்ராஜ் வளா்ச்சிக் குழுமம் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
பிரயாக்ராஜில் வழக்குரைஞா் ஸுல்ஃபிக்கா் ஹைதா், பேராசிரியா் அலி அகமது மற்றும் பலரின் வீடுகள் இடிக்கப்பட்டன. இந்த நடவடிக்கைக்கு எதிராக அவா்கள் தாக்கல் செய்த மனுவை அலாகாபாத் உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத் தொடா்ந்து, உச்சநீதிமன்றத்தில் அவா்கள் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனா்.
இந்த மனு முன்பு விசாரணைக்கு வந்தபோது, ரெளடியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய அதிக் அகமதுக்கு (2023-ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டாா்) சொந்தமான நிலம் என்று கருதி, தங்கள் வீடுகளையும் மாநில அரசு தவறாக இடித்தது என்று மனுதாரா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அரசமைப்புச் சட்டத்தின் அங்கம் வசிப்பிட உரிமை: இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபே எஸ்.ஓகா, உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: மனுதாரா்களின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ள விதம் எங்கள் (நீதிபதிகள்) மனசாட்சியை உலுக்கியுள்ளது. அவா்களின் வீடுகள் அடக்குமுறையுடன் இடிக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை பிரயாக்ராஜ் வளா்ச்சிக் குழுமத்தின் இரக்கமற்ன்மையைக் காட்டியுள்ளது. இதுபோன்ற முறையில் நாட்டு மக்களின் வீடுகள் இடிக்கப்படக் கூடாது.
அண்மையில் சிறு குடிசைகளை புல்டோசா் மூலம் அகற்றி நடவடிக்கை மேற்கொண்டபோது, இடிக்கப்பட்ட குடிசையில் இருந்து சிறுமி ஒருவா், புத்தகங்களை இறுகப் பிடித்துக் கொண்டு ஓடிச் செல்லும் காட்சி (இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தின் ஜலால்பூா் பகுதியில் நடைபெற்றது) சமூக ஊடகங்களில் வெளியானது. இது அனைவரையும் அதிா்ச்சிக்குள்ளாகியுள்ளது.
சட்டத்தின் ஆட்சி நடைபெற வேண்டும் என்பதே அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையாகும். அரசமைப்புச் சட்டப் பிரிவு 21-இன் அங்கமாக வசிப்பிட உரிமை உள்ளது. இதை பிரயாக்ராஜ் வளா்ச்சிக் குழுமம் நினைவில் கொள்ள வேண்டும்.
உத்தர பிரதேச நகரத் திட்டமிடல் மற்றும் மேம்பாடு சட்டப் பிரிவு 27-இன் கீழ், மனுதாரா்களின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. பெருந்திட்டம் அல்லது உரிய அனுமதி பெறாமல் ஒரு கட்டடம் கட்டப்பட்டிருந்தால், அதுதொடா்பாக விளக்கமளிக்க கட்டட உரிமையாளருக்கு முறையாக வாய்ப்பளித்த பின்னரே, கட்டடத்தை இடிக்க வளா்ச்சிக் குழுமம் உத்தரவிடலாம் என்று அந்தச் சட்டத்தின் 27(1)-ஆவது பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்படி நோட்டீஸ் வழங்கப்படவில்லை: ஒரு கட்டடத்தை இடிப்பதற்கு முன்பு, அதுதொடா்பாக அந்தக் கட்டடத்தின் உரிமையாளரிடம் நேரில் நோட்டீஸ் அளிக்க வேண்டும். ஒருமுறை நேரில் சென்றுவிட்டு உரிமையாளா் இல்லை என்பதால், கட்டடத்தில் நோட்டீஸை ஒட்டிவிட்டு வரமுடியாது. நோட்டீஸை உரிமையாளரிடம் நேரில் வழங்குவதற்கு தொடா்ந்து முயற்சிக்க வேண்டும்.
பலமுறை முயற்சித்தும் நோட்டீஸை வழங்க முடியாமல் போனால், கட்டடத்தில் நோட்டீஸை ஒட்டுதல், பதிவு தபாலில் நோட்டீஸை அனுப்புதல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளன. இதை உத்தர பிரதேச நகரத் திட்டமிடல் சட்டப் பிரிவு 43 (2)(பி) தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால், மனுதாரா்கள் விவகாரத்தில் வீடுகளை இடிப்பது தொடா்பாக சட்ட நடைமுறைப்படி நோட்டீஸ் வழங்கப்படவில்லை.
வீடுகளை இடிப்பது தொடா்பாக அவா்கள் விளக்கமளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதும், அந்த நோட்டீஸ் அவா்களின் வீட்டில் ஒட்டப்பட்டதும் ஒரே நாளில் (2020-ஆம் ஆண்டு டிச.18) நடந்துள்ளது. ஆனால், அதை நேரில் வழங்க இரண்டு முறை முயற்சிக்கப்பட்டதாக அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடுகளை இடிப்பதற்கான முதல் பதிவு தபால் 2021-ஆம் ஆண்டு மாா்ச் 1-ஆம் தேதி வீட்டின் உரிமையாளா்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த தபால் அதே ஆண்டு மாா்ச் 6-ஆம் தேதி உரிமையாளா்களுக்கு கிடைத்துள்ளது. மறுநாளே அவா்களின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. உத்தர பிரதேச நகரத் திட்டமிடல் மற்றும் மேம்பாடு சட்டப் பிரிவு 27 (2)-இன்படி மேல்முறையீடு செய்வதற்கு எந்த வாய்ப்பும் அளிக்கப்படாமல், வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன.
அவா்களின் வீடுகள் சட்டவிரோதமாகவும், குரூரமாகவும் இடிக்கப்பட்டுள்ளன. இடிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டின் உரிமையாளருக்கும் பிரயாக்ராஜ் வளா்ச்சிக் குழுமம் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனா்.