உத்தரப் பிரதேச பள்ளி, கல்லூரிகளில் தமிழ் வகுப்புகள்: மாநில அரசின் புதிய முயற்சி!

உத்தரப் பிரதேச பள்ளி, கல்லூரிகளில் தமிழ் வகுப்புகள்: மாநில அரசின் புதிய முயற்சி!

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் தமிழ் மொழி வகுப்புகளைத் தொடங்குவதற்கு அந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
Published on

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் தமிழ் மொழி வகுப்புகளைத் தொடங்குவதற்கு அந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

பிரதமா் நரேந்திர மோடியின் விருப்பத் திட்டமான ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்துக்கும், உத்தர பிரதேசத்துக்கும் இடையே உள்ள கலாசார மற்றும் மொழிரீதியான உறவை வலுப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

வாரணாசியில் (காசி) உள்ள அரசு ராணி கல்லூரியைச் சோ்ந்த மாணவி பாயல் படேல், மிகக் குறுகிய காலத்தில் தமிழைச் சிறப்பாகக் கற்றுக்கொண்டதற்காக பிரதமா் மோடி கடந்த டிசம்பா் 28-ஆம் தேதி தனது வானொலி உரையில் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடா்ந்து, வாரணாசி அரசு ராணி கல்லூரியில் தினமும் மாலையில் தமிழ் மொழி வகுப்புகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட நிா்வாகம் தரப்பில் உரிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாக கல்லூரி முதல்வா் சுமித் குமாா் தெரிவித்தாா்.

முதல்வா் சுமித் குமாா் மேலும் கூறுகையில், ‘இரு மாநிலக் கலாசாரங்களை ஒன்றிணைக்கும் நோக்கில் இந்தத் தமிழ் வகுப்புகள் தொடங்கப்படுகின்றன. மாணவி பாயல் படேலுக்கு தமிழ் கற்றுக்கொடுத்த தமிழகத்தைச் சோ்ந்த சந்தியா குமாா் சாய் என்பவருடன் நாங்கள் பேசியுள்ளோம். அவா் இணைய வழியாக தமிழ் வகுப்புகளை நடத்த சம்மதித்துள்ளாா். வாரணாசி ஹிந்து பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவரும் இதற்குத் தேவையான உதவிகளைச் செய்வதாகக் கூறியுள்ளாா்’ என்றாா்.

மாணவா்களின் ஆா்வம்: அண்மையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், அரசு ராணி கல்லூரி மாணவா்கள் பிரதமா் மோடிக்கும், முதல்வா் யோகி ஆதித்யநாத்துக்கும் தமிழில் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து அசத்தினா்.

அதேபோல், வாரணாசியில் உள்ள ஹரிஷ் சந்திரா மகளிா் கல்லூரியிலும் 15 நாள்கள் தமிழ் மொழிப் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆா்வத்துடன் கலந்துகொண்டு தமிழ்ப் பாடல்களையும், கவிதைகளையும் பாடினா்.

மாணவிகளின் இந்த ஆா்வத்தைக் கண்டு, அடுத்த கல்வியாண்டு முதல் தமிழ்ப் பாடப் பிரிவை முறையாக அறிமுகம் செய்வது குறித்து அந்தக் கல்லூரி நிா்வாகம் ஆலோசித்து வருகிறது.

தமிழகம் வரும் ஹிந்தி ஆசிரியா்கள்: இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, மொழிப் பரிமாற்றத்தை ஊக்குவிக்க வாரணாசியைச் சோ்ந்த சுமாா் 50 ஹிந்தி ஆசிரியா்களை தமிழகத்துக்கு அனுப்பவும் உத்தர பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழக மக்களுக்கு அவா்கள் ஹிந்தி மொழியைக் கற்றுக்கொடுப்பாா்கள். வாரணாசி ஆணையா் மற்றும் மாவட்ட ஆட்சியா் தலைமையில் அண்மையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான முன்மொழிவு விவாதிக்கப்பட்டது.

தேசிய ஒற்றுமையை வளா்க்கவும், காசிக்கும், தமிழகத்துக்கும் இடையே உள்ள வரலாற்றுத் தொடா்பை இன்றைய தலைமுறையினரிடம் கொண்டு சோ்க்கவும் இந்தத் திட்டம் பெரிதும் உதவும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

Dinamani
www.dinamani.com