

பெங்களூர்: கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் வீட்டுக்கு அம்மாநில முதல்வர் சித்தராமையா செவ்வாய்க்கிழமை காலை வருகை தந்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பதவி யாருக்கு என்ற சர்ச்சை வெடித்த நிலையில், காங்கிரஸ் தலைமையின் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் டி.கே. சிவக்குமாரும் பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
கடந்த வாரம் முதல்வர் சித்தராமையா வீட்டுக்கு நேரில் சென்ற சிவக்குமார், உணவு விருந்தில் கலந்துகொண்டு ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர், சித்தராமையாவே முதல்வராக தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சிவக்குமாரின் அழைப்பின் பேரில் அவரின் வீட்டுக்கு காலை உணவு விருந்தில் கலந்துகொள்வதற்காக சித்தராமையா இன்று சென்றுள்ளார்.
சிவக்குமாரும் அவரது சகோதரரும் முன்னாள் எம்பியுமான டி.கே.சுரேஷும் வீட்டு வாசலுக்கு வந்து சித்தராமையாவை வரவேற்று அழைத்துச் சென்றனர்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமையும் போதே முதல்வர் பதவி யாருக்கு என்ற சர்ச்சை வெடித்தது. காங்கிரஸ் தலைமை தலையிட்டு முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையாவும், கடைசி இரண்டரை ஆண்டுகள் சிவக்குமாரும் முதல்வராக இருப்பார்கள் என்று முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், முதல்வர் பதவிக்கான மோதல் இரண்டு மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டாலும், கர்நாடக காங்கிரஸ் அரசு இரண்டரை ஆண்டுகள் நிறைவு செய்ததும், சர்ச்சை தீவிரமடைந்தது.
கர்நாடக முதல்வராக, ஐந்து ஆண்டுகள் முழுமையாக தான் நீடிக்க மக்கள் ஆதரவு கிடைத்துள்ளதாக என்று சித்தராமையா தெரிவித்த நிலையில், இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு சுழற்சி முறையில் முதல்வராக நியமிக்கப்படுவேன் என்று தனக்கு கட்சித் தலைமை சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டதாக சிவக்குமார் கூறினார்.
இந்த நிலையில்தான், இரு தலைவர்களும் ஒருவருக்கொருவர் பேசி பிரச்னைக்குத் தீர்வுகாணுமாறு காங்கிரஸ் உயர்நிலைக் குழு கேட்டுக் கொண்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.