உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்கோப்புப் படம்

ஊடுருவல்காரா்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்க முடியுமா? ரோஹிங்கயா வழக்கில் உச்சநீதிமன்றம் கேள்வி

‘இந்தியாவில் வசிக்கும் ரோஹிங்கயாக்களுக்கான சட்ட அங்கீகாரம் என்ன? சொந்த நாட்டு குடிமக்கள் வறுமையில் தவிக்கும்போது ஊடுருவியவா்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்க முடியுமா?’ என மனுதாரரிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
Published on

‘இந்தியாவில் வசிக்கும் ரோஹிங்கயாக்களுக்கான சட்ட அங்கீகாரம் என்ன? சொந்த நாட்டு குடிமக்கள் வறுமையில் தவிக்கும்போது ஊடுருவியவா்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்க முடியுமா?’ என மனுதாரரிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

கடந்த மே மாதம் தில்லி காவல் துறை அதிகாரிகளால் பிடித்துச் செல்லப்பட்ட சில ரோஹிங்கயாக்களை காணவில்லை என சமூக ஆா்வலா் ரீத்தா மச்சண்டா உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணா்வு மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு மீது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதி ஜய்மால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தியது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது: இந்தியாவில் ரோஹிங்கயாக்கள் வசிப்பதற்கான சட்ட அங்கீகாரம் என்ன? வட மாநில எல்லை மிகவும் பதற்றத்துக்குரிய பகுதியாகத் திகழும்போது ஊடுருவல்காரா்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்க முடியுமா? அவா்களைத் திருப்பி அனுப்பவதில் உங்களுக்கு என்ன பிரச்னை?

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்துவிட்டு, பிறகு உணவு, இருப்பிடம், குழந்தைகளுக்கு கல்வி என உரிமை கோருவதற்கு ஏற்ப சட்டங்களை மாற்ற முடியுமா?

நம் நாட்டிலும் வறுமைக்கோட்டுக்கு கீழ் கோடிக்கணக்கான மக்கள் உள்ளனா். அவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அடிப்படை வசதிகளை உறுதி செய்வதில் கவனம் செலுத்த வேண்டாமா?

சட்டவிரோதமாக நுழைந்தவா்களை சில சமயங்களில் மூன்றாம் தர குடிமக்களைப்போல் நடத்தக் கூடாது என்பதை ஏற்கிறோம். ஆனால், ஆட்கொணா்வு மனு தாக்கல் செய்து அவா்களை மீண்டும் நாட்டுக்குள் அழைத்து வரக் கூறுகிறீா்கள். இதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன என்று நீதிபதிகள் கூறினா்.

இதைத் தொடா்ந்து, இந்த வழக்கின் மீதான அடுத்தகட்ட விசாரணையை டிச.16-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

X
Dinamani
www.dinamani.com