

ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவிக்கான சர்வதேச நிறுவனத்தின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பது பற்றித் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் துணிந்து பொய் சொல்கிறார் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவிக்கான சர்வதேச நிறுவனத்தின் (ஐ.டி.இ.ஏ) தலைவராக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் ஸ்வீடனில் நடைபெறும் விழாவில் இன்று பதவியேற்றுக் கொள்ளவுள்ளார்.
இதுதொடர்பாக கடந்த திங்கள்கிழமை செய்தியாளர்களுடன் பேசிய ஞானேஷ் குமார் தெரிவித்ததாவது:
“நியாயமான முறையிலும், வெளிப்படைத் தன்மையுடன் இந்தியாவில் தேர்தல்கள் நடைபெற்றிருப்பதை உலக நாடுகள் அங்கீகரித்துள்ளன. இந்த நிலையில், அதன் வெளிப்பாடாக, கடந்த 30 ஆண்டுகளில் முதல்முறையாக, ‘ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவிக்கான சர்வதேச நிறுவனத்தின் (ஐ.டி.இ.ஏ)’ தலைமைப் பதவியேற்றுக்கொள்ள 37 ஜனநாயக நாடுகள் இணைந்து இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளன.
இது, அனைத்து இந்தியர்களுக்கும், அதேபோல தேர்தல் அதிகாரிகளுக்கும் பெருமிதம் அளிக்கும் தருணமாக அமைந்துவிட்டது” என்றார்.
இந்த காணொலியைப் பகிர்ந்து கேரள காங்கிரஸ் தெரிவித்திருப்பதாவது:
“ஞானேஷ் குமார் நடத்திய ’வெளிப்படைத்தன்மை தேர்தலுக்கு’ அங்கீகாரமாக சர்வதேச தேர்தல் நிறுவனத்தின் தலைவர் பதவி அவருக்கு வழங்கப்பட்டதாக கூறுகிறார்.
ஆனால், அந்நிறுவனத்தின் தலைவர் பதவி சுழற்சி முறையில் வழங்கப்படுவது. தற்போது இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2033 வரை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக இருப்பவர், அந்தப் பதவியில் இருப்பார்.
மோடி பக்தர்களை ஏமாற்றுவதற்காக, அடிப்படையான ஒரு விஷயத்தை கேமரா முன் பொய் சொல்லும் துணிச்சல் இவருக்கு இருக்கிறது. அவர்கள் ஏமாறத் தகுதியானர்வர்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.