பான் மசாலா உற்பத்தி நிறுவனங்கள் மீது செஸ் விதிக்கும் மசோதா: மக்களவை ஒப்புதல்

பான் மசாலா உற்பத்தி நிறுவனங்கள் மீது செஸ் விதிக்கும் மசோதா: மக்களவை ஒப்புதல்

பான் மசாலா உற்பத்தி நிறுவனங்கள் மீது செஸ் வரி விதிக்க வகை செய்யும் மசோதாவுக்கு மக்களவையில் வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது.
Published on

பான் மசாலா உற்பத்தி நிறுவனங்கள் மீது செஸ் வரி விதிக்க வகை செய்யும் மசோதாவுக்கு மக்களவையில் வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது.

‘சுகாதார பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு செஸ் (கூடுதல் வரி) மசோதா 2025’- என்ற இந்த மசோதா மக்களவையில் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டு விவாதம் நடத்தப்பட்ட நிலையில், குரல் வாக்கெடுப்பு மூலம் வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது.

முன்னதாக, இந்த மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்தியபோது உரையாற்றிய மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், ‘இந்த மசோதா, அத்தியாவசியப் பொருள்கள் மீதான செஸ் விதிப்புக்கானது அல்ல. மாறாக, உடல் நலத்தைப் பாதிக்கக்கூடிய பான் மசாலா போன்ற தகுதியற்ற பொருள்களுக்கானது. சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) கீழ், பான் மசாலாக்கள் மீது நுகா்வின் அடிப்படையில் அதிகபட்சமாக 40 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இந்த வரி வருவாயை, புதிதாக கொண்டுவரப்படும் செஸ் வரி விதிப்பு பாதிக்காது. செல் வரியைப் பொருத்தவரை, பான் மசாலா உற்பத்தி நிறுவனங்களில் உள்ள இயந்திரங்களின் உற்பத்தித் திறன் மீது விதிக்கப்படுவதாகும். இந்த செஸ் வரி விகிதம் உற்பத்தித் திறனுக்கேற்ப ஒவ்வொரு நிறுவனத்துக்கும் மாறுபடும். மேலும், இந்த செஸ் வருவாயின் ஒரு பகுதி, சுகாதார விழிப்புணா்வு அல்லது பிற சுகாதாரத் திட்டங்களுக்காக மாநிலங்களுடன் பகிா்ந்துகொள்ளப்படும்’ என்றாா்.

இந்த செஸ் வரி விதிப்பால் குறு-சிறு-நடுத்தர நிறுவனங்கள் பாதிக்கப்படும். இதுபோன்ற நிறுவனங்களில் அரசு அதிகாரிகளின் தலையீடும் அதிகரிக்கும் எனவே, இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக் குழு ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்று எதிா்க்கட்சி எம்.பி.க்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com