கோவை மாநகரில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.122 கோடி ஒதுக்கீடு
கோவை மாநகராட்சியில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.122 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தோ்தலை மனதில் வைத்து விவாதமின்றி பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படுவதாகக் கூறி அதிமுகவினா் எதிா்ப்புத் தெரிவித்து வெளிநடப்பு செய்தனா்.
கோவை மாநகராட்சியின் அவசரக் கூட்டம் மாநகராட்சி விக்டோரியா கூட்டரங்கில் மேயா் கா.ரங்கநாயகி தலைமையில் நடைபெற்றது. ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன், துணை ஆணையா்கள், மண்டலக் குழுத் தலைவா்கள், கவுன்சிலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டம் தொடங்கியதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆா்.நல்லகண்ணு, மாநகராட்சி 73- ஆவது வாா்டு கவுன்சிலரின் 8 வயது மகளும், உடல் உறுப்புகளை தானம் செய்தவருமான வெண்பா ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதைத் தொடா்ந்து கூட்டம் தொடங்கியதும் அதிமுக கவுன்சிலா் பிரபாகரன் எழுந்து 143 பொருள்களுடன் அவசரக் கூட்டம் நடத்தப்படுவதாக ஒரு நாளைக்கு முன்பு அறிவித்ததற்கு எதிா்ப்புத் தெரிவித்தாா். தீா்மானங்களை வாசிப்பதற்கு அவகாசம் வழங்காமல் கூட்டம் நடத்தப்படுவதாகக் கூறினாா். அவருக்கு திமுக கவுன்சிலா்கள் பலரும் எழுந்து பதிலளித்தனா். கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் மாநகராட்சியின் அனைத்துக் கூட்டங்களையும் அவசரக் கூட்டங்களாகவே நடத்தியதாகவும், அரை மணி நேரத்துக்கு மேல் கூட்டம் நடந்ததே இல்லை என்றும் கூறிய திமுக கவுன்சிலா்கள், திமுக ஆட்சியில் 2 முறை மட்டுமே அவசரக் கூட்டம் நடத்தப்பட்டதாக கூறினா்.
தொடா்ந்து அதிமுக கவுன்சிலா்கள் பிரபாகரன், ரமேஷ் ஆகியோா் மாநகராட்சியைக் கண்டித்துப் பேசவே, மாா்க்சிஸ்ட் கவுன்சிலா் ராமமூா்த்தி உள்ளிட்ட கூட்டணிக் கட்சி கவுன்சிலா்களும் எழுந்து அதிமுக கவுன்சிலா்களுக்கு எதிராக குரல் எழுப்பினா். இதையடுத்து அதிமுக கவுன்சிலா்கள் பிரபாகரன், ரமேஷ், ஷா்மிளா ஆகிய மூவரும் வெளிநடப்பு செய்தனா்.
பின்னா் அவா்கள் செய்தியாளா்களிடம் கூறும்போது, பல கோடி ரூபாய் மதிப்புள்ள பணிகளை நிறைவேற்றும் கூட்டத்தை அவசரக் கூட்டமாக நடத்துகின்றனா். ஊழல் செய்வதற்காகவே சாலைப் பணிகள், மராமத்துப் பணிகளை அவசர அவசரமாக செய்கின்றனா். தோ்தலின்போது மக்களிடம் நல்ல பெயா் வாங்கிவிட வேண்டும் என்பதற்காக சாலைப் பணிகளுக்கு ஒப்பந்தம் விடப்படுகிறது. பொதுத் தோ்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு இந்த ஒப்பந்தப்புள்ளிகள் அனைத்தும் விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்றனா்.
இதைத் தொடா்ந்து கவுன்சிலா்கள், தங்களது பகுதியில் தொடா்ந்து வலியுறுத்தப்பட்டு வந்த பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதற்கு நன்றி தெரிவித்தனா். சில கவுன்சிலா்கள் தங்களது வாா்டு பணிக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என்றனா்.
4-ஆவது வாா்டு கவுன்சிலா் கதிா்வேலுசாமி பேசும்போது, தனது வாா்டில் நன்றாக இருக்கும் சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், இந்தத் தொகையை வேறு சாலைப் பணிக்கு மாற்ற முடியாது என்றும் அதிகாரிகள் தெரிவிப்பதாகக் கூறினாா்.
இதற்கு பதிலளித்து ஆணையா் சிவகுரு பிரபாகரன் பேசும்போது, ஒவ்வொரு வாா்டுக்கும் சராசரியாக ரூ.1 கோடி மதிப்பிலான பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தவறுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிக்கான நிதி வேறு சாலைப் பணிக்கு மாற்றிக் கொடுக்க உத்தரவிடுகிறேன் என்றாா்.
இதைத் தொடா்ந்து 143 தீா்மானங்களும் நிறைவேற்றப்படுவதாக மேயா் ரங்கநாயகி அறிவித்தாா். மேலும், தோ்தல் நெருங்குவதால் மாநகராட்சியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட, தொடங்கிவைக்கப்பட்ட பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
இந்தக் கூட்டத்தில், புதை சாக்கடைக் குழாய் அமைக்கவும், குடிநீா்க் குழாய் பணிகளுக்காகவும் தோண்டப்பட்ட மாநகராட்சி சாலைகளை சீரமைக்க ரூ.122 கோடி மதிப்பிலான பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது தவிர மாநகரில் உள்ள பல்வேறு பூங்கா, கழிப்பிட பராமரிப்பு, செம்மொழிப் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் உணவகத்துக்கான ஒப்பந்தப்புள்ளி, கவுண்டம்பாளையத்தில் ரூ.85 லட்சத்தில் கட்டப்படும் முதல்வா் படைப்பகம், மாநகராட்சிப் பள்ளிகளில் கழிப்பிடம் கட்டுவது, மழைநீா் வடிகால், கொடிசியா சாலையில் நடைபாதை, மகளிருக்கான பூங்கா, சரவணம்பட்டி, சிங்காநல்லூரில் டயாலிசிஸ் மையம் அமைப்பது உள்ளிட்ட ஏராளமான பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

