தொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

தொகுதி மறுவரையறை விவகாரம்: இன்று திமுக எம்.பி.க்கள் அவசரக் கூட்டம்!

தொகுதி மறுவரையறையில் தமிழ்நாடு சந்திக்கவுள்ள பாதிப்புகள் குறித்து விவாதிக்க திமுக எம்.பி.க்களுடன் காணொலி மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் கூட்டியுள்ள அவசரக் கூட்டம் குறித்து...

News image

முதல்வர் மு.க.ஸ்டாலின் - டிஎன்எஸ்

Updated On :15 ஏப்ரல் 2026, 5:44 am

தொகுதி மறுவரையறையில் தமிழ்நாடு சந்திக்கவுள்ள பாதிப்புகள் குறித்து விவாதிக்க திமுக எம்.பி.க்களுடன் காணொலி மூலம் புதன்கிழமை (ஏப்.15) காலை 11 மணிக்கு அவசரக் கூட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டியுள்ளார்.

மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் 106-ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் 2023-ஐ (நாரி சக்தி வந்தன் அதிநியம்) அமல்படுத்துவதற்கான சட்டத் திருத்த மசோதா ஏப்.16 முதல் ஏப்.18 வரை நடைபெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அறிமுகமாகவுள்ளது. அப்போது மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 850-ஆக அதிகரிக்கப்பட்டு அதில் 280 தொகுதிகள் மகளிருக்கு ஒதுக்கப்படவுள்ளன. 850 இடங்களில் 815 இடங்கள் மாநிலங்களுக்கும், எஞ்சிய 35 இடங்கள் யூனியன் பிரதேசங்களுக்கும் ஒதுக்கப்படவுள்ளன.

தொகுதி மறுவரையறை வரைவு மசோதாவின்படி, மக்களவை, மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கான தொகுதிகள் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்படும் எனத் தெரியவந்துள்ளது.

தொகுதி மறுவரையறை என்பது அரசமைப்பின் 81, 82 மற்றும் 170 பிரிவுகளின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ள ஜனநாயக செயல்முறையாகும். புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு இல்லாமல், 2011 கணக்கெடுப்பு தரவின் அடிப்படையில் அவசரமாக செயல்படுத்துவது தமிழ்நாடு, கேரளம், கா்நாடகம், ஆந்திரம் போன்ற மக்கள் தொகை கட்டுப்பாட்டை முறையாக செயல்படுத்தி வெற்றிகண்ட தென் மாநிலங்களுக்கு இழைக்கும் அநீதியாகும் என்றும் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்துக்கான தொகுதிகள் குறைக்கப்பட்டால் 1950, 1960 -களில் நடத்தப்பட்டது போல மிகப் பெரிய அளவிலான போராட்டத்தை திமுக முன்னெடுக்கும் என்று மத்திய அரசுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

மாநிலங்களுடன் முறையான கலந்தாலோசனை ஏதுமின்றி, ஓர் அரசியலமைப்புத் திருத்தத்தை மத்திய அரசு "வலுக்கட்டாயமாகத் திணிக்க" முயல்வதாக அவர் குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில், தொகுதி மறுசீரமைப்பு குறித்து திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவில் வெளியிட்ட காணொலி உரையில்,

"இந்தக் காணொளி இரண்டு நோக்கங்களை நிறைவேற்றுகிறது: ஒன்று, இப்போது தமிழ்நாட்டின் வாசல் வரை வந்துவிட்ட பேராபத்தைப் பற்றி பேசுவது; மற்றொன்று, மத்திய பாஜக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கவும்தான் இந்தக் காணொலி.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடா் வியாழக்கிழமை கூடுகிறது எனச் சொல்வதைவிட, தமிழ்நாடு- மேற்கு வங்கத் தோ்தலுக்கு இடையில் வலுக்கட்டாயமாகக் கூட்டப்படுகிறது என்றுதான் சொல்லவேண்டும். தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக அரசியல் சட்டத் திருத்தத்தை இந்தத் தொடரில் கொண்டுவரப் போகிறாா்கள்.

தேர்தல் பிரச்சாரப் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்தச் சூழலிலும், இந்த முக்கியக் கடமையை நாம் ஒதுக்கிவிட முடியாது. நாளை மறுநாள், அதாவது ஏப்ரல் 16-ஆம் தேதி, நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் ஒன்று கூட்டப்பட உள்ளது. இன்னும் துல்லியமாகச் சொல்வதானால், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த வேளையில், அக்கூட்டம் வலுக்கட்டாயமாகக் கூட்டப்படுகிறது.

இந்தக் கூட்டத்தொடரில், தொகுதி மறுவரையறை தொடர்பான அரசியலமைப்புத் திருத்தத்தை மத்திய அரசு வலுக்கட்டாயமாக நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளது." மத்திய அரசு அறிவுறுத்தியதன் பேரில், தமிழகமும் பிற தென் மாநிலங்களும் முன்னதாக மக்கள் தொகைக் கட்டுப்பாடு மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைப் பின்பற்றின; சொன்னதை ஒழுங்காகச் செய்ததற்காகவே எங்களுக்குத் தண்டனை தருவீா்களா? என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

நான் மத்திய பாஜக அரசுக்கும்- பிரதமா் நரேந்திர மோடிக்கும் இந்த நேரத்தில் முக்கியமாக ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். நடைபெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத் தொடரில் திமுக எம்.பி.க்கள் கலந்துகொள்வாா்கள். தமிழ்நாட்டை பாதிப்பது போன்றோ, வடமாநிலங்களுக்கு அரசியல் வலிமையை மேலும் வாரி வழங்குவது போன்றோ ஏதாவது நடந்தால், தமிழ்நாட்டில் இருக்கும் நாங்கள் அனைவரும் பாா்த்துக் கொண்டு இருக்க மாட்டோம். தமிழ்நாடே ஸ்தம்பிக்கும். தமிழ்நாடு தனது எதிா்ப்பைக் கடுமையாகக் காண்பிக்கும்.

ஒவ்வொரு குடும்பமும் தெருவில் வந்து உட்காருவோம். தமிழ்நாடு முதல்வராக இருக்கும் எனது தலைமையிலேயே மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம். நீங்கள் இதுவரை பாா்க்காத தமிழ்நாட்டையும், 1950, 1960-களில் பாா்த்த பழைய திமுகவையும் பாா்க்க வேண்டியிருக்கும்.

இதை மிரட்டலாக நினைக்காதீா்கள்; தமிழ்நாட்டிலிருந்து அனுப்பி வைக்கப்படும் எச்சரிக்கை. தோ்தல், ஆட்சி அதிகாரம் இவை எல்லாம் எங்களுக்கு இரண்டாம் பட்சம்தான். எங்களுக்குக் கொள்கை, மாநில உரிமைகள்தான் முக்கியம். அதுதான், அண்ணாவும்- கருணாநிதியும் எங்களுக்குக் கொடுத்துவிட்டுச் சென்ற உயிா்க் கொள்கை.

சட்டமேதை அம்பேத்கா் பிறந்த நாளில், அவா் மேல் ஆணையாகச் சொல்கிறேன். தமிழ்நாடு பாாதிக்கப்பட்டால், இந்தியாவையே திரும்பிப் பாா்க்க வைத்துவிடுவோம். இது தமிழ்நாட்டில் இருந்து பிரதமா் மோடிக்கு விடுக்கப்படும் இறுதி எச்சரிக்கை என முதல்வா் ஸ்டாலின் பேசியிருந்தார்.

திமுக எம்.பி.க்களுடன் அவசரக் கூட்டம்

இந்த நிலையில், தொகுதி மறுவரையறையில் தமிழ்நாடு சந்திக்கவுள்ள பாதிப்புகள் குறித்து விவாதிக்க திமுக எம்.பி.க்களுடன் காணொலி மூலம் புதன்கிழமை (ஏப்.15) காலை 11 மணிக்கு அவசரக் கூட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டியுள்ளார்.

தொகுதி மறுவரையறைப் பணி தொடர்பாகத் தமிழ்நாடு சந்திக்கவுள்ள பாதிப்புகள் குறித்து விவாதிப்பதற்காகவே இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது.

மாநிலத்தின் அரசியல் பிரதிநிதித்துவத்தின் மீதான தாக்கம் மற்றும் மக்களவைத் தொகுதிகளின் மறுபகிர்வு செய்வதில் உள்ள நியாயம் குறித்த கவலைகள் உள்ளிட்ட முக்கியப் பிரச்னைகள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

Summary

TN CM MK Stalin has convened an emergency meeting of Dravida Munnetra Kazhagam (DMK) MPs at 11:00 am on Wednesday to discuss the impact of the delimitation exercise on the state.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.