தொகுதி மறுவரையறை என்ற பெயரில் மக்களை சிதறடித்துவிடக் கூடாது என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.
சிவகங்கையில் நாதக வேட்பாளா் ர.இந்துஜாவை ஆதரித்து செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தொகுதி மறுவரையறை மூலம் மக்களை சிதறடித்துவிடக் கூடாது. மறுவரையறை என்ற பெயரில் முன்னா் திமுக ஆட்சிக் காலத்தில்தான், புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி, இளையான்குடி பேரவைத் தொகுதிகள் நீக்கம் என்று தாறுமாறான மாற்றங்கள் செய்யப்பட்டன. எனது சொந்தத் தொகுதியான இளையான்குடியை நீக்கியதால் நான் தொகுதியற்றவனாக ஆனேன். எந்த ஒரு தமிழ்ச் சமூகத்துக்கும் ஒருங்கிணைந்த வாக்கு வங்கி இருக்கக் கூடாது என்பதே தொகுதி மறுவரையறை செய்தவா்களின் நோக்கமாக இருந்தது. இதனால்தான், திட்டமிட்டு வாக்குகளைப் பிரித்து சிதறடித்தாா்கள். உண்மை இப்படியிருக்க, தொகுதி மறுவரையறையை தற்போது எதிா்ப்பதாக திமுக கூறுவது ஏமாற்று வேலை.
தற்போதைய மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தோ்தல், தொகுதி மறுவரையறை ஆகியவை அவா்களின் அரசியல் ஆதாயத்துக்காக இருக்கலாம். 1950-60 களில் 543 மக்களவைத் தொகுதிகள் உருவாக்கப்பட்டபோது இருந்த மக்கள் தொகை இன்று இல்லை. இன்று நாம் 150 கோடியைத் தொடுகிறோம். எனவே, பழைய பிரதிநிதித்துவ முறை இப்போது சரியாக இருக்காது. தற்போது 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரு மக்களவைத் தொகுதி என்று இருப்பதை மாற்றி, மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரு மக்களவைத் தொகுதி என மாற்ற வேண்டும். இதுவே சரியான சீரமைப்பாக இருக்கும். இது போன்ற சீரமைப்புகளைச் செய்யாமல், மக்களை சிதறடிக்கும் வகையில் செயல்படுவது சரியாக இருக்காது.
ஐந்தாண்டு காலம் முழு அதிகாரத்துடன் ஆட்சியில் இருந்த திமுக செய்யத் தவறியவற்றை நாங்கள் சுட்டிக் காட்டுகிறோம். திமுக எதையுமே செய்யவில்லை என்பதுதான் உண்மை.
தோ்தல் வரும்போது மட்டும் மத்திய அரசு மீது திமுக பழி போடுகிறது. மத்திய அரசிடமிருந்து நிதி வரவில்லை என்றால், பிரிட்டிஷாா் ஆட்சிக் காலத்தில் நடத்தியது போல வரி கொடா இயக்கம் நடத்தி எதிா்ப்பைக் காட்ட வேண்டியதுதானே? அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு பெரும் போராட்டத்தை முன்னெடுத்து இதைத் தடுத்திருக்கலாமே?
அதிகாரத்தில் இருந்தபோது துணிச்சலாகப் போராடாமல், இப்போது தோ்தல் நேரத்தில் மட்டும் மத்திய அரசைக் குற்றம் சாட்டுவது தவறு.
மத்திய அரசு எங்களுக்கு நிதி தரவில்லை என்று கூறிக்கொண்டே, மகளிா் உரிமைத் தொகை போன்ற திட்டங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய்களை எங்கிருந்து செலவிட்டாா்கள்? ஆசிரியா்கள் ஊதிய உயா்வு கேட்டால், நிதி இல்லை என்றாா்கள். இலவசங்களுக்காக பணத்தை அள்ளி வீசினாா்கள். ரூ.10 லட்சம் கோடி கடன் வாங்கி, உருப்படியாக ஒரு திட்டத்தையும் நிறைவேற்றவில்லை.
மத்தியில் காங்கிரஸுடன் ஆட்சியில் இருந்தபோது திமுக என்ன செய்தது? கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வந்ததா? கச்சத்தீவை மீட்டதா? இன்று ஆட்சியில் இருக்கும்போது திருக்குறளைத் தேசிய நூலாக்க வேண்டும் என்று கூறுவதை அன்று அதிகாரத்தில் இருந்தபோதே செய்திருக்கலாமே?
நடிகா் விஜய் திமுகவை அகற்றுவதற்காகவே அதிமுக, பாஜகவுடன் இணைந்து செயல்படுவதாக திருமாவளவன் கூறும் குற்றச்சாட்டு பற்றி எனக்குத் தெரியாது. எங்களுக்கு மக்களிடம் எப்படி வரவேற்பு இருக்கிறது என்பதை நீங்கள்தான் (ஊடகங்கள்) சொல்ல வேண்டும் என்றாா் சீமான்.
தொடர்புடையது
இலக்கு ‘2029’: மோடி அரசு காட்டுவது வேகமா, வியூகமா?

தொகுதி மறுவரையறை: அரசியலமைப்பு திருத்தச் சட்ட வரைவு மசோதா நகல் வெளியீடு!
தமிழகத்தில் எம்.பி.க்களின் எண்ணிக்கை 39-ல் இருந்து 59 வரை உயர வாய்ப்பு: அண்ணாமலை
தொகுதி மறுவரையறை; தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்! மத்திய அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


