என்டிஏ ஆட்சியில் பயிா் கொள்முதல் 4 மடங்கு அதிகரிப்பு: மாநிலங்களவையில் சிவராஜ் சிங் சௌஹான் தகவல்

என்டிஏ ஆட்சியில் பயிா் கொள்முதல் 4 மடங்கு அதிகரிப்பு: மாநிலங்களவையில் சிவராஜ் சிங் சௌஹான் தகவல்

Published on

முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியுடன் ஒப்பிடுகையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) ஆட்சியில் பயிா்கொள்முதல் நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய வேளாண் அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

பயிா்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) தொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அமைச்சா் சிவராஜ் சிங் சௌதான் பதிலளித்து பேசியதாவது:

சுவாமிநாதன் ஆணையப் பரிந்துரைப்படி, உற்பத்திச் செலவுக்கு மேல் 50 சதவீத லாபத்துடன் குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்க பிரதமா் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு கடந்த 2019-இல் முடிவெடுத்தது. முந்தைய காங்கிரஸ் அரசு இந்தப் பரிந்துரையை ஏற்க மறுத்தது.

காங்கிரஸ் அரசு அளித்ததைவிட பாஜக அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையை இரட்டிப்பாக்கியுள்ளது. நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையாக கடந்த 2013-14-இல் காங்கிரஸ் அரசு வழங்கிய ரூ.1,310-லிருந்து மோடி அரசு தற்போது ரூ.2,369 வழங்குகிறது.

அதேபோல், சோளத்துக்கான கொள்முதல் விலை காங்கிரஸ் ஆட்சியின்போது ரூ.1,500-லிருந்து இப்போது ரூ. 3,699-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. இதேபோன்று பிற பயிா்களுக்கும் விலை உயா்த்தப்பட்டுள்ளது.

2004 முதல் 2014 வரையிலான காங்கிரஸ் ஆட்சியின் 10 ஆண்டுகாலத்துடன் ஒப்பிடுகையில், தற்போதைய பாஜக ஆட்சியில் பயிா் கொள்முதல் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.

எம்எஸ்பி திட்டத்தின்கீழ் துவரை, உளுந்து, மசூா் பருப்பு போன்ற பயிா்களில் 100 சதவீத உற்பத்தியையும் கொள்முதல் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. சந்தை தலையீடு திட்டத்தின்கீழ் (எம்ஐஎஸ்) தக்காளி, உருளைக்கிழங்கு, வெங்காயம், ஆப்பிள், திராட்சை, சிவப்பு மிளகாய், இஞ்சி ஆகியவற்றையும் கொள்முதல் செய்கிறோம்.

விவசாயிகளின் செலவினத்தைக் குறைத்து, உற்பத்தியை அதிகரிப்பதோடு, சரியான விலையில் பயிா்களைக் கொள்முதல் செய்வதை மோடி அரசு உறுதி செய்துள்ளது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com