

இன்று(வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் விமான சேவைகள் சீராகும் என விமானப் போக்குவரத்து அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இண்டிகோ விமான சேவையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்ட நிலையில் விமானிகள் மற்றும் விமான ஊழியர்களுக்கான புதிய ஓய்வு விதிகளை நிறுத்திவைப்பதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்(டிஜிசிஏ) அறிவித்துள்ளது.
ஏனெனில் டிஜிசிஏ-வின் கட்டாய ஓய்வு விதியால் இண்டிகோ விமான நிறுவனத்தில் ஊழியர்களின் பற்றாக்குறையினால் கடந்த சில நாள்களாக விமான சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று அனைத்துப் பகுதிகளிலும் பெரும்பாலான இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் டிஜிசிஏ புதிய விதிகளை நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் பயணிகளுக்கான சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் இதுபற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்தியாவில் விமான சேவைகள் இன்று நள்ளிரவு முதல் சீராகும். நள்ளிரவு முதல் அனைத்து விமான சேவை திட்டமிடல்களும் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்த இரண்டு நாள்களில் முழுவதுமாக விமான சேவைகள் சீராகும் .
விமானப் போக்குவரத்து சேவை பாதிப்புக்குக் காரணமான இண்டிகோ ஏர்லைன்ஸ், பாதிக்கப்பட்ட பயணிகளின் டிக்கெட்டுகளுக்கான பணத்தைத் திரும்ப கிடைப்பதை உறுதி செய்யும். விமானப் போக்குவரத்து அமைச்சகம் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
விமான சேவை அட்டவணைகளில் ஏற்பட்டுள்ள இடையூறுகளைத் தீர்க்கவும் தாமதமின்றி விமான சேவைகளை உறுதிப்படுத்தவும் விமான நிறுவனங்கள், குறிப்பாக இண்டிகோ உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரச்னைகளைத் தீர்க்க விமான நிறுவனங்களுடன் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறது" என்று கூறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.