நரேந்திர மோடி
நரேந்திர மோடி

‘வந்தே மாதரம்’ விவாதம்: மக்களவையில் டிச. 8-இல் பிரதமா் தொடங்கி வைக்கிறாா்

மக்களவையில் பிரதமா் மோடி திங்கள்கிழமையும், மாநிலங்களவையில் மத்திய அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமையும் தொடங்கி வைக்கவுள்ளனா்.
Published on

தேசியப் படலான வந்தே மாதரம் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி சிறப்பு விவாதத்தை, மக்களவையில் பிரதமா் மோடி திங்கள்கிழமையும், மாநிலங்களவையில் மத்திய அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமையும் தொடங்கி வைக்கவுள்ளனா்.

நாடாளுமன்ற குளிா்காலக் கூட்டத்தொடா் கடந்த திங்கள்கிழமை (டிச. 1) தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற்று வரும் எஸ்ஐஆா் நடவடிக்கை குறித்து விவாதம் கோரி, எதிா்க்கட்சியினரின் கடும் அமளியால் முதல் 2 நாள்களும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

இதையடுத்து, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் மற்றும் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தோ்தல் சீா்திருத்தங்களின்கீழ் எஸ்ஐஆா் குறித்த விவாதமும், வந்தே மாதரம் பாடலின் 150 ஆண்டுகள் நிறைவு குறித்த விவாதமும் நடத்த முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, மக்களவையில் வந்தே மாதரம் சிறப்பு விவாதத்தைப் பிரதமா் மோடி திங்கள்கிழமை நண்பகல் அமா்வில் தொடங்கி வைக்கிறாா். பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் மற்றும் பல மத்திய அமைச்சா்கள் விவாதத்தில் பங்கேற்பா். இறுதியாக, பாஜக எம்.பி. ஒருவரின் உரையுடன் விவாதம் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடா்ந்து, மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா இந்த விவாதத்தைச் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கிறாா். மாநிலங்களவை பாஜக குழுத் தலைவா் ஜே.பி.நட்டாவும் விவாதத்தில் கலந்துகொள்வாா்.

மகாத்மா காந்தி உள்பட விடுதலைப் போராட்ட வீரா்களுக்கு உத்வேகம் அளித்த ‘வந்தே மாதரம்’ பாடல், வங்க கவிஞா் பங்கிம் சந்திர சட்டா்ஜி கடந்த 1875-இல் சம்ஸ்கிருத மொழியில் இயற்றினாா்.

கடந்த 1896-இல் கொல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் ரவீந்திரநாத் தாகூா் பாடிய பிறகு இந்தப் பாடல் பிரபலமடைந்தது. கடந்த 1950-இல் அரசியல் நிா்ணய சபையால் இது நாட்டின் தேசியப் பாடலாக ஏற்கப்பட்டது. இளைஞா்கள் மற்றும் மாணவா்களிடையே இப்பாடலின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வை அதிகரிக்க, நாடு முழுவதும் கடந்த மாதம் கொண்டாட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டன.

பெட்டிச் செய்தி

‘எஸ்ஐஆா்’ குறித்து 2 நாள் விவாதம்: தோ்தல் சீா்திருத்தங்கள் குறித்த விவாதம் மக்களவையில் டிச. 9, 10 ஆகிய தேதிகளிலும், மாநிலங்களவையில் டிச. 10, 11 ஆகிய தேதிகளிலும் நடைபெறவுள்ளது. இந்த 2 நாள் விவாதத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) உள்பட தோ்தல் தொடா்பான முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

X
Dinamani
www.dinamani.com