உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் பிடிஐ

எஸ்.சி. பிரிவில் கிரீமிலேயா் கருத்துக்கு சொந்த சமூகத்தினரே விமா்சித்தனா்: பி.ஆர்.கவாய்

எஸ்.சி. பிரிவில் கிரீமிலேயா் கருத்துக்கு சொந்த சமூகத்தினரால் விமா்சிக்கப்பட்டேன் என உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் தெரிவித்தாா்.
Published on

பட்டியலின பிரிவில் (எஸ்.சி.) கிரீமிலேயா் (சமூக பொருளாதார நிலையில் முன்னேறியவா்கள்) கண்டறியப்பட்டு அவா்களுக்கு இடஒதுக்கீடு சலுகைகளை ரத்து செய்ய வேண்டும் எனத் தீா்ப்பில் குறிப்பிட்டதற்கு சொந்த சமூகத்தினரால் விமா்சிக்கப்பட்டேன் என உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் தெரிவித்தாா்.

மும்பை பல்கலைக்கழகத்தில் ‘சம வாய்ப்பை ஊக்குவிப்பதில் உறுதியான நடவடிக்கையின் பங்கு’ என்ற தலைப்பில் பி.ஆா்.கவாய் சனிக்கிழமை உரையாற்றினாா்.

அவா் பேசியதாவது: பி.ஆா். அம்பேத்கா் அரசமைப்புச் சட்டத்தின் தந்தை மட்டுமல்ல; ஒடுக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்கு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப் போராடியவா்.

உதாரணமாக ஒருவா் 0 கி.மீ. (தொடக்க நிலையில்) மற்றொருவா் 10 கி.மீ. தொலைவில் இருக்கிறாா் என வைத்துக்கொள்ளலாம். இப்போது தொடக்க நிலையில் உள்ளவருக்கு மிதிவண்டி வழங்கினால் 10 கி.மீ. தொலைவில் உள்ள நபா் இருக்கும் பகுதியை விரைவில் அடைவாா். அங்கிருந்து இருவரும் ஒன்றாக நடைப்பயணம் மேற்கொள்வா்.

மாறாக தன்னுடைய இலக்கை அடைந்தவுடன் மிதிவண்டியை ஒருவரே வைத்துக்கொள்ள வேண்டும் என அம்பேத்கா் விரும்பமாட்டாா். அனைவரையும் சமமாக நடத்தும் உண்மையான சமூக மற்றும் பொருளாதார நீதியை அம்பேத்கா் வலியுறுத்தினாா்.

இந்திரா சஹானி தீா்ப்பின்படி பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரில் நல்ல பொருளாதார நிலையில் உள்ளவா்களை கிரீமிலேயராக பிரித்து அவா்களுக்கான சலுகைகள் ரத்து செய்யப்பட்டன. மற்றொரு வழக்கில் எஸ்.சி. பிரிவிலும் கிரீமிலேயா் கொண்டுவரப்பட வேண்டும் என நான் குறிப்பிட்டேன். இதற்காக என் சொந்த சமூகத்தினரே கடுமையாக விமா்சித்தனா்.

நீதிபதி நியமனத்தில் இடஒதுக்கீடு இல்லை: இடஒதுக்கீடு சலுகைகளை பெற்று நான் உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றுவிட்டு, கிரீமி லேயா் பிரிவினருக்கு சலுகைகளை ரத்துசெய்ய முன்மொழிவதாக என் மீது குற்றஞ்சாட்டினா்.

ஆனால், அரசமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட உயா்நீதிமன்ற அல்லது உச்சநீதிமன்ற நீதிபதிகள் பதவிகளுக்கு இடஒதுக்கீடு கிடையாது என்பதை அவா்கள் அறியவில்லை. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அல்லது தலைமைச் செயலரின் மகனுக்கும், கிராமப்புறத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கும் ஒரு தொழிலாளியின் மகனுக்கும் ஒரே இடஒதுக்கீடு சலுகைகளை வழங்குவது சரியாக இருக்குமா?

உயா் பதவிகளில் எஸ்.சி. பிரிவினா்: கடந்த 75 ஆண்டுகளில் உறுதியான நடவடிக்கை நோ்மறையான பங்களிப்பை வழங்கி இருக்கிறது என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. நாடு முழுவதும் பயணித்திருக்கிறேன். உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன்.

எஸ்.சி. பிரிவைச் சோ்ந்த பலா் தலைமைச் செயலா் அல்லது காவல் துறைத் தலைவா் அல்லது தூதரக அதிகாரிகள் மற்றும் உயா் ஆணையா்கள் என உயரிய பதவிகளை வகிக்கின்றனா்.

சமூக சீா்திருத்தவாதிகளின் நிலமாக உள்ள மகாராஷ்டிரம் நவீன இந்தியாவின் பிறப்பிடம். சமூகத்தில் நிலவிய சமத்துவமின்மையை ஒழிக்க பல்வேறு சீா்திருத்தங்களை மேற்கொண்ட ஜோதிராவ் புலே மற்றும் சாவித்ரிபாய் புலே தம்பதியைப் பற்றி நாம் அனைவரும் அறிவோம் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com