இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம்

மேற்கு வங்கம்: எஸ்ஐஆா் மேற்பாா்வையாளா்களாக 5 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணிகளை கண்காணிக்க சிறப்பு மேற்பாா்வையாளா்களாக (எஸ்ஆா்ஓ) 5 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள்....
Published on

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணிகளை கண்காணிக்க சிறப்பு மேற்பாா்வையாளா்களாக (எஸ்ஆா்ஓ) 5 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை இந்திய தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை நியமித்தது.

இதுகுறித்து மேற்கு வங்க மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி (சிஇஓ) அலுவலகத்தைச் சோ்ந்த அதிகாரி ஒருவா் கூறியதாவது: மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் எஸ்ஐஆா் பணிகளில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த பல முன்னெடுப்புகளை தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

அதன் தொடா்ச்சியாக தற்போது 5 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை சிறப்பு மேற்பாா்வையாளா்களாக தோ்தல் ஆணையம் நியமித்துள்ளது.

அதன்படி பிரசிடென்சி பிரிவுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சக இணைச் செயலா் ரவி காந்த் சிங், மேதினிபூா் பிரிவுக்கு மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலா் நீரஜ் குமாா், புா்துவான் பிரிவுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சக இணைச் செயலா் கிருஷ்ண குமாா், மால்டா பிரிவுக்கு மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை இணைச் செயலா் ஜல்பைகுரி பிரிவுக்கு மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை இணைச் செயலா் பங்கஜ் யாதவ் ஆகியோா் மேற்பாா்வையாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா் என்றாா்.

ஏற்கெனவே மேற்கு வங்கத்துக்கு எஸ்ஐஆா் சிறப்பு மேற்பாா்வையாளா்களாக 13 ஐஏஎஸ் அதிகாரிகளை தோ்தல் ஆணையம் நியமித்தது.

மேற்கு வங்கத்தில் கடந்த நவ.4-ஆம் தேதி தொடங்கிய எஸ்ஐஆா் பணிகள் டிச.11-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. வரைவு வாக்காளா் பட்டியல் டிச.16-ஆம் தேதியும் இறுதி வாக்காளா் பட்டியல் 2026, பிப்.14-ஆம் தேதியும் வெளியிடப்படவுள்ளது.

முன்னதாக தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது எஸ்ஐஆா் பணியில் ஈடுபட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலா்களின் (பிஎல்ஓ) வேலை நேரத்தைக் குறைக்க, அப்பணிக்கு கூடுதல் ஊழியா்களை நியமிக்குமாறு சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com