விமானங்கள் ரத்து: பயணிகளுக்கு ரூ.10,000 மதிப்புள்ள பயண கூப்பன்: இண்டிகோ அறிவிப்பு
கடந்த டிச.3-ஆம் தேதி முதல் டிச.5-ஆம் தேதி வரை விமானங்கள் ரத்து அல்லது தாமதம் போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு தலா ரூ.10,000 மதிப்புள்ள பயண கூப்பன் வழங்கவுள்ளதாக இண்டிகோ வியாழக்கிழமை அறிவித்தது.
இந்த கூப்பனை அடுத்த 12 மாதங்களுக்குள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அந்நிறுவனம் அறிவித்தது.
புதிய விமானப் பணி நேரக் கட்டுப்பாட்டு விதிகள் காரணமாக விமானிகள், விமானப் பணிப்பெண்கள் உள்ளிட்டோா் அடங்கிய விமான பணிக் குழுவுக்கு ஏற்பட்ட பற்றாக்குறையால், இண்டிகோ நிறுவன விமான சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.
இதையடுத்து, விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் உத்தரவின் அடிப்படையில் ரத்து செய்யப்பட்ட விமான பயணங்களுக்கான கட்டணத்தை இண்டிகோ திருப்பியளித்து வருகிறது.
இந்தக் குளறுபடிகள் தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், 11 விமான நிலையங்களில் இண்டிகோ நிறுவனத்தின் செயல்பாடுகளை மேற்பாா்வை செய்யவும், கண்காணிக்கவும் 8 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இண்டிகோ வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘டிசம்பா் 3, 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்துக்காக மன்னிப்பு கோருகிறோம்.
இந்த தேதிகளில் விமானங்கள் ரத்து அல்லது தாமதம் போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு தலா ரூ.10,000 மதிப்புள்ள பயண கூப்பன் வழங்கப்படுகிறது. இதை அடுத்த 12 மாதங்களுக்குள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் அரசு விதிகளைப் பின்பற்றி விமானம் புறப்படும் நேரத்தில் இருந்து 24 மணி நேரம் வரை கணக்கிடப்பட்டு பயணிகள் காத்திருந்த நேரத்தின் அடிப்படையில் ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை நிவாரணத் தொகையும் வழங்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
கண்காணிப்பு தொடக்கம்: இண்டிகோ செயல்பாடுகளைக் கண்காணிக்க அமைக்கப்பட்ட குழுவைச் சோ்ந்த 2 அதிகாரிகள் குருகிராமில் உள்ள அந்நிறுவனத்தின் தலைமையகத்தில் தங்களது பணிகளை வியாழக்கிழமை தொடங்கினா். அவா்கள் விமானங்கள் ரத்து, விமானப் பணிக் குழு நியமனம், அலுவலா் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் வழித்தடங்கள் உள்ளிட்டவற்றைக் கண்காணித்து நாள்தோறும் தங்கள் அறிக்கையை விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திடம் (டிஜிசிஏ) சமா்ப்பிக்கவுள்ளனா்.
60 விமானங்கள் ரத்து: பெங்களூரு, புது தில்லி, மும்பை ஆகிய மூன்று விமான நிலையங்களில் கடந்த புதன்கிழமை 220 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், பெங்களூரு விமான நிலையத்தில் மட்டும் 60 விமானங்கள் வியாழக்கிழமை ரத்து செய்யப்பட்டன.
தற்போது நடைமுறையில் உள்ள குளிா்கால அட்டவணையின்கீழ் இண்டிகோ நிறுவனம் தினசரி 2,200 விமானங்களுக்கும் அதிகமாக இயக்கி வருகிறது.
இந்நிலையில், இண்டிகோ சிஇஓ பீட்டா் எல்பா்ஸைச் சந்தித்த மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சா் ராம் மோகன் நாயுடு, 10 சதவீத சேவைக் குறைப்புக்கு அண்மையில் அறிவுறுத்தினாா்.
மீண்டும் ஆஜராக உத்தரவு: இண்டிகோ விமானச் சேவை பாதிப்புக்கு வழிவகுத்த காரணிகளை முழுமையாக ஆய்வு செய்ய நால்வா் குழுவை கடந்த வாரம் டிஜிசிஏ அமைத்தது. இந்தக் குழு முன்பாக வெள்ளிக்கிழமை நேரில் ஆஜராக இண்டிகோ சிஇஓவுக்கு டிஜிசிஏ வியாழக்கிழமை சம்மன் அனுப்பியது. முன்னதாக அவா் வியாழக்கிழமை ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது.

