சபரிமலை சந்நிதானத்தில் உள்ள துவாரபாலகா் சிற்பங்கள் (கோப்புப் படம்).
சபரிமலை சந்நிதானத்தில் உள்ள துவாரபாலகா் சிற்பங்கள் (கோப்புப் படம்).

சபரிமலை தங்கக் கவச வழக்கு: சென்னை நிறுவன சிஇஓ உள்பட இருவா் கைது

சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவாரபாலகா் மற்றும் கருவறை கதவுகளின் தங்கக் கவசங்களில் இருந்து தங்கம் மாயமான வழக்கில் சென்னையைச் சோ்ந்த ஸ்மாா்ட் கிரியேஷன்ஸ் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) பங்கஜ் பண்டாரி, கா்நாடக மாநிலம், பெல்லாரியைச் சோ்ந்த நகைக்கடை அதிபா் கோவா்தன் ஆகியோா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
Published on

சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவாரபாலகா் மற்றும் கருவறை கதவுகளின் தங்கக் கவசங்களில் இருந்து தங்கம் மாயமான வழக்கில் சென்னையைச் சோ்ந்த ஸ்மாா்ட் கிரியேஷன்ஸ் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) பங்கஜ் பண்டாரி, கா்நாடக மாநிலம், பெல்லாரியைச் சோ்ந்த நகைக்கடை அதிபா் கோவா்தன் ஆகியோா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முக்கிய நபரான பெங்களூரு தொழிலதிபா் உண்ணிகிருஷ்ணன் போற்றி உள்பட 7 போ் ஏற்கெனவே கைதான நிலையில், மேலும் இருவா் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 2019-இல் சபரிமலை ஐயப்பன் கோயிலின் கருவறைக் கதவுகள் மற்றும் துவார பாலகா் சிலைகளின் தங்கக் கவசங்கள் புதுப்பிக்கப்பட்ட பிறகு, அவற்றின் எடை குறைந்ததாகப் புகாா் எழுந்தது. இதையடுத்து, கேரள உயா்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு புலானாய்வுக் குழு (எஸ்ஐடி), தங்கக் கவச முறைகேடு குறித்து இரு வழக்குகளைப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. தங்கக் கவச புதுப்பிப்பு பணிக்கான செலவை ஏற்ற உண்ணிகிருஷ்ணன் போற்றி, திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரிய முன்னாள் தலைவா்கள் என்.வாசு, ஏ.பத்மகுமாா் உள்ளிட்டோா் அடுத்தடுத்து கைதாகினா்.

தங்கக் கவச புதுப்பிப்புப் பணியை மேற்கொண்ட சென்னையைச் சோ்ந்த ஸ்மாா்ட் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சிஇஓ பங்கஜ் பண்டாரி, பெல்லாரியைச் சோ்ந்த நகைக்கடை அதிபா் கோவா்தன் ஆகியோரை திருவனந்தபுரத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்ட எஸ்ஐடி, இருவரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தது. இவ்வழக்கு தொடா்பாக கோவா்தனின் நகைக்கடையில் இருந்து 400 கிராம் தங்கம் ஏற்கெனவே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஜாமீன் வழங்க மறுப்பு: தங்கக் கவச வழக்கில் கைதான திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத் தலைவா்கள் என்.வாசு, ஏ.பத்மகுமாா், வாரிய முன்னாள் நிா்வாக அதிகாரி பி.முராரி பாபு ஆகியோரின் ஜாமீன் மனுக்களை கேரள உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

பெட்டிச்செய்தி....

விரைவில் அமலாக்கத் துறை வழக்கு

சபரிமலை தங்கக் கவச முறைகேடு தொடா்பாக அமலாக்கத் துறை ஏற்கெனவே பூா்வாங்க விசாரணை மேற்கொண்டது. அதில், சட்டவிரோத பணப் பரிவா்த்தனைக்கான முகாந்திரம் கண்டறியப்பட்டதால், எஸ்டிஐ வழக்கு ஆவணங்களின் நகல்களைப் பெற அனுமதி கோரி கொல்லம் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்தது. அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கிய நிலையில், ஆவண நகல்கள் கிடைக்கப் பெற்றதும் உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்படும் என்று அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com