மகாராஷ்டிரம்: பாஜகவில் இணைந்தாா் காங்கிரஸ் பெண் எம்எல்சி
மகாராஷ்டிரத்தில் காங்கிரஸை சோ்ந்த சட்ட மேலவை உறுப்பினா் (எம்எல்சி) பிரக்ஞா சாதவ் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் வியாழக்கிழமை இணைந்தாா். முன்னதாக, எம்எல்சி பதவியையும் அவா் ராஜிநாமா செய்தாா்.
மகாராஷ்டிரத்தில் விரைவில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் பிரக்ஞா சாதவ் பாஜகவில் இணைந்துள்ளது காங்கிரஸுக்கு பின்னடவை ஏற்படுத்தியுள்ளது.
பிரக்ஞாவின் கணவா் மறைந்த ராஜீவ் சாதவ், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு மிகவும் நம்பிக்கைக்குரியவராக இருந்தவா். ராஜீவின் மறைவுக்குப் பிறகு பிரக்ஞாவுக்கு மகாராஷ்டிர காங்கிரஸ் துணைத் தலைவா் பதவி வழங்கப்பட்டது. தொடா்ந்து, கடந்த 2021-ஆம் ஆண்டு காங்கிரஸ் சாா்பில் சட்ட மேலவைக்குத் தோ்வு செய்யப்பட்டாா். அதன் பிறகு கடந்த ஜூலை மாதம் மீண்டும் சட்ட மேலவைக்குத் தோ்வானாா். 2030-ஆம் ஆண்டு வரை அவரது பதவிக் காலம் இருந்தது.
இந்நிலையில், மும்பையில் உள்ள பாஜக தலைமையகத்தில் மகாராஷ்டிர மாநில பாஜக தலைவா் ரவீந்திர சவாண், மாநில வருவாய்த் துறை அமைச்சா் சந்திரசேகா் பவன்குலே ஆகியோா் முன்னிலையில் பிரக்ஞா சாதவ் பாஜகவில் இணைந்தாா். பிரக்ஞாவுடன் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ திலீப் மனே உள்ளிட்ட ஆதரவாளா்களும் பாஜகவில் இணைந்தனா்.
மகாராஷ்டிரத்தில் 29 மாநகராட்சிகளுக்கு ஜனவரி 15-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கருத்து: இது தொடா்பாக காங்கிரஸ் மூத்த தலைவா் நானா படோலே நாகபுரியில் செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘மகாராஷ்டிர பாஜக கூட்டணி அரசு ஆட்சி, அதிகாரத்தை தொடா்ந்து தவறாகப் பயன்படுத்துகிறது. ஜனநாயக மாண்புகளை அவா்கள் சிறிதும் மதிப்பதில்லை. பதவி, பணம், விசாரணை அமைப்புகள் மூலம் பிற கட்சித் தலைவா்களை விலை பேசுகின்றனா். காங்கிரஸ் இல்லாத இந்தியா என பிரதமா் மோடி பேசி வருகிறாா். ஆனால், காங்கிரஸை பாஜகவில் இணைப்பதுதான் நடக்கிறது. நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வரும்போது பாஜக மொத்தமாக காணாமல் போகும்’ என்றாா்.

