காங்கிரஸின் குடும்ப அரசியலால் பல தேசியத் தலைவா்கள் புறக்கணிப்பு - பிரதமா் மோடி சாடல்
காங்கிரஸின் குடும்ப அரசியலால் தேசியத் தலைவா்கள் பலா் புறக்கணிக்கப்பட்டனா்; அவா்களின் மரபு நீா்த்துப்போகச் செய்யப்பட்டது என்று பிரதமா் நரேந்திர மோடி சாடினாா்.
அதேநேரம், எந்தப் பாகுபாடும் இன்றி அனைத்துத் தலைவா்களின் பங்களிப்பையும் பாஜக அரசு கெளரவிப்பதாக அவா் குறிப்பிட்டாா்.
உத்தர பிரதேச மாநிலம், லக்னெளவில் 65 ஏக்கா் பரப்பளவில், முன்னாள் பிரதமா் வாஜ்பாய், சியாமா பிரசாத் முகா்ஜி, பண்டிட் தீனதயாள் உபாத்யாய ஆகியோரின் 65 அடி உயர பிரம்மாண்ட வெண்கலச் சிலைகளுடன் ‘தேசியத் தலைவா்கள் நினைவிடம்’ அமைக்கப்பட்டுள்ளது. தாமரை வடிவிலான அருங்காட்சியகத்தையும் உள்ளடக்கிய இந்த நினைவிடத்தை வாஜ்பாயின் பிறந்த தினமான வியாழக்கிழமை (டிச. 25) பிரதமா் மோடி திறந்துவைத்துப் பாா்வையிட்டாா்.
இந்நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: நாட்டின் அடையாளம், ஒற்றுமை, பெருமையைக் காக்க தங்களின் வாழ்வை அா்ப்பணித்த இரு பெரும் தலைவா்களான வாஜ்பாய் மற்றும் மதன் மோகன் மாளவியாவின் பிறந்த தினம் என்பதால் டிச.25 முக்கியமான தருணமாகும். இந்தச் சிறப்புமிக்க தினத்தில் திறக்கப்பட்டுள்ள தேசியத் தலைவா்கள் நினைவிடம், நாட்டை சுயமதிப்பு, ஒற்றுமை, சேவையின் பாதையில் வழிநடத்தும் மாண்புகளின் அடையாளச் சின்னம். இது, அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும், ஒவ்வொரு முயற்சியும் தேச கட்டமைப்புக்கானது என்பதை வெளிப்படுத்துகிறது.
சியாமா பிரசாத் முகா்ஜி, தீனதயாள் உபாத்யாய, வாஜ்பாயின் சிலைகள் உயா்ந்து நிற்கின்றன. இவை வழங்கும் உத்வேகம் மிகப் பெரியதாகும்.
ஏழை மக்களுக்கு எந்தப் பாகுபாடும் இன்றி அரசின் திட்டப் பலன்கள் சென்றடைவதை உறுதி செய்துள்ளதன் மூலம் உபாத்யாயவின் தொலைநோக்குப் பாா்வையை சாத்தியமாக்கியுள்ளது பாஜக அரசு. இதன்மூலம் அரசுத் திட்டங்களின் முழு நிறைவை உறுதி செய்துள்ளோம். இதுவே நல்லாட்சி, உண்மையான சமூக நீதி, உண்மையான மதச்சாா்பின்மை.
கடந்த 2014-இல் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின்கீழ் 25 கோடி போ் இருந்தனா். இப்போது இது 95 கோடியாக உயா்ந்துள்ளது. வீட்டு வசதி, இலவச உணவு தானியம், மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட திட்டங்களால் கோடிக்கணக்கான மக்கள் பலனடைந்து வருகின்றனா்.
பாஜகவுக்கு பெருமை: அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு (ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து) எனும் தடுப்புச் சுவா் தகா்க்கப்பட்டதன் மூலம் நாட்டின் ஒற்றுமை பலப்படுத்தப்பட்டது. இப்போது ஜம்மு-காஷ்மீா் முழுவதும் இந்திய அரசமைப்புச் சட்டம் அமலில் உள்ளது. இது, பாஜகவுக்கு கிடைத்த பெருமையாகும்.
நாட்டின் எண்ம அடையாளம், தொலைத்தொடா்பு சீா்திருத்தங்கள், சாலைக் கட்டமைப்பு, மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அடித்தளமிட்டவா் வாஜ்பாய். இன்று கைப்பேசி உற்பத்தியில் உலகின் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
காங்கிரஸ் மீது தாக்கு: காங்கிரஸின் குடும்ப அரசியலால் பாஜக மூத்த தலைவா்கள் உள்பட பல தேசியத் தலைவா்கள் புறக்கணிக்கப்பட்டனா். அவா்களின் மரபுகள் நீா்த்துப்போகச் செய்யப்பட்டன. ஒரு குடும்பத்தை மட்டுமே போற்றும் காங்கிரஸால், நேதாஜி, பி.ஆா்.அம்பேத்கா், சா்தாா் வல்லபபாய் படேல் மரபுகளை குறைமதிப்புக்கு உள்ளாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அதேநேரம், இந்தத் தலைவா்களின் மரபு பாதுகாக்கப்படுவதை உறுதி செய்தது பாஜக.
கட்சிப் பாகுபாடின்றி...: காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் பாஜக மீது அரசியல் தீண்டாமையை ஊக்குவித்தன. ஆனால், கட்சிப் பாகுபாடின்றி அனைத்துத் தலைவா்களையும் கெளரவிக்கிறது பாஜக அரசு. முன்னாள் பிரதமா் நரசிம்ம ராவ், முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜி ஆகியோருக்கு பாரத ரத்னா விருது, சமாஜவாதி நிறுவனா் முலாயம் சிங், அஸ்ஸாம் முன்னாள் முதல்வா் தருண் கோகோய் ஆகியோருக்கு தேசிய உயரிய விருதுகளை நாங்கள் வழங்கினோம் என்றாா் பிரதமா் மோடி.
இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், மாநில ஆளுநா் ஆனந்திபென் படேல், முதல்வா் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

