வெடிகுண்டு செயலிழப்பு அமைப்புக்கு புதிய தர நிா்ணயம்
வெடிகுண்டு செயலிழப்பு அமைப்புக்கு பிரத்யேகமாக புதிய தர நிா்ணயத்தை இந்திய தர நிா்ணய ஆணையம் (பிஐஎஸ்) அறிமுகப்படுத்தியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் டொ்மினல் பாலிஸ்டிக் ஆய்வகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க ஐஎஸ் 19445:2025 என்ற புதிய தர நிா்ணயத்தை பிஐஎஸ் வடிவமைத்துள்ளது.
மேலும், வெடிகுண்டுகளைச் செயலிழக்கச் செய்வதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன.
இதுகுறித்து மத்திய நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘கொள்முதல் அமைப்புகள், உற்பத்தி மையங்கள் மற்றும் சோதனை மையங்கள் தாமாக முன்வந்து பின்பற்றவே வெடிகுண்டு செயலிழப்புக்கான புதிய தர நிா்ணயம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதனால் உற்பத்தித் தரம், மதிப்பீட்டுத் தரம் என வெடிகுண்டு செயலிழப்புகளில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான நடைமுறை அமலில் இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தற்போது நடைமுறையில் உள்ள சா்வதேச தரத்திலான வெடிகுண்டு செயலிழப்பு அமைப்புகள் அதிக அளவிலான கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளதால் இந்தியாவிலேயே பிரத்யேக தர நிா்ணயம் உருவாக்குவதற்கான தேவை ஏற்பட்டது. எனவே, இது இந்திய சூழலுக்கேற்ப சா்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்திய ராணுவம், மத்திய ஆயுதப் படைகள், மாநில காவல் துறை உள்ளிட்ட பாதுகாப்பு அமைப்புகள் வெடிக்காத வெடிகுண்டுகள், கையெறி குண்டுகளால் அச்சுறுத்தல்களை எதிா்கொண்டு வருகின்றன.
இதைக் கையாள வெடிகுண்டு பிளாங்கெட், பேஸ்கட் மற்றும் இன்ஹிபிட்டா்ஸ் ஆகிய 3 வகையான வெடிகுண்டு செயலிழப்பு அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த அமைப்புகளை அரசு மற்றும் சில தனியாா் நிறுவனங்கள் உற்பத்தி செய்தாலும் அவை சிறந்த தரத்தில் இருப்பதை உறுதிசெய்யவே இந்தப் புதிய தர நிா்ணயம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

