

பொங்கல் பண்டிகைக்கு ரூ. 5 ஆயிரம் கொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திமுக 5% வாக்குறுதிகளை மட்டுமே இதுவரை நிறைவேற்றியுள்ளதாகவும், இன்னும் 3 அமாவாசைகளில் திமுக ஆட்சி அகற்றப்பட்டுவிடும் எனவும் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,
திமுக ஒரு தீய சக்தி. அந்த தீய சக்தியை வேரோடு அகற்ற வேண்டும் என்பதற்காகவே அதிமுகவை எம்ஜிஆர் உருவாக்கினார். அதனை ஜெயலலிதா கட்டிக்காத்தார். திமுகவை அகற்ற வேண்டும் என்பதுதான் அன்றிலிருந்தே அதிமுகவின் லட்சியம். இதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
திமுக ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் நிறைவுபெறவுள்ளது. ஆனால், அக்கட்சி, 5% வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றியுள்ளது. திமுக அகற்றப்படுவதற்கு 3 அமாவாசைகளே உள்ளது.
அதிமுக ஆட்சியில்தான் கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்பட்டது. காஞ்சிபுரத்தை பிரித்து செங்கல்பட்டு மாவட்டத்தை உருவாக்கியது அதிமுக அரசு. இவ்வாறு மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிய பிறகே மக்களை அதிமுக சந்திக்கிறது.
எங்கள் ஆட்சியில் தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் 95% திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
கரோனா காலத்தில் மக்களை காத்தது அதிமுக அரசு. நியாய விலைக்கடையில் விலையில்லா பொருள்கள் கொடுத்தோம்.
இனியாவது மக்களின் எண்ணங்களை புரிந்துகொண்டு பொங்கல் பண்டிகைக்கு ரூ.5 ஆயிரம் கொடுங்கள்.
அதிமுக கொடுத்த கோரிக்கையின்படி 100 நாள் வேலையை 125 நாள்களாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. 100 நாள் வேலைத்திட்டத்தில் ஊதியம் முழுமையாக கொடுக்கவில்லை. வேலைய கூட முறையாகத் தரவில்லை.
அதிமுக ஆட்சி அமைத்தால் 100 நாள்கள் வேலைத்திட்டம் 150 நாள்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். திருப்போரூர் அதிமுகவின் கோட்டை. 2026-ல் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய உழைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.