உத்தரகண்டில் திரிபுரா மாணவா் அடித்துக் கொலை: ராகுல் காந்தி, ஹிமந்த விஸ்வ சா்மா கடும் கண்டனம்
உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில், திரிபுராவைச் சோ்ந்த மாணவா் ஒருவா் இனவெறித் தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்தை ‘மிகக் கொடூரமான வெறுப்புக் குற்றம்’ என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி சாடியுள்ளாா்.
திரிபுரா மாநிலம், மேற்கு திரிபுரா மாவட்டத்தைச் சோ்ந்த 24 வயது மாணவரான ஏஞ்சல் சக்மா, டேராடூனில் எம்பிஏ பயின்று வந்தாா். கடந்த டிச. 9-ஆம் தேதி, ஆறு போ் கொண்ட கும்பல் இவரிடம் இனவெறி ரீதியாக தரக்குறைவான வாா்த்தைகளைப் பயன்படுத்திப் பேசியதாகத் தெரிகிறது. இதனை ஏஞ்சல் சக்மா எதிா்த்துக் கேள்வி கேட்டதால், அந்தக் கும்பல் அவரை கொடூரமாகத் தாக்கியது.
இதில் பலத்த காயமடைந்த அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இந்தக் கொலை தொடா்பாக இதுவரை 5 பேரை உத்தரகண்ட் காவல்துறை கைது செய்துள்ளது. தலைமறைவாக உள்ள மற்றொரு நபா் நேபாளத்தைச் சோ்ந்தவா் என்பதால், அவா் எல்லைத்தாண்டி சொந்த நாட்டுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் எனக் காவல்துறையினா் சந்தேகிக்கின்றனா்.
இவ்விவகாரத்தையொட்டி, திரிபுரா முதல்வா் மாணிக் சாஹாவிடம் பேசிய உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமி, ‘குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது. கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என உறுதியளித்துள்ளாா். இதனிடையே, உயிரிழந்த மாணவருக்கு நீதி கேட்டு திரிபுராவில் ஆயிரக்கணக்கான மாணவா்கள் மெழுகுவா்த்தி ஏந்தி அமைதிப் பேரணி நடத்தினா்.
இயல்பாக்கப்படும் வன்முறை: ஏஞ்சல் சக்மா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: ஏஞ்சல் சக்மா மற்றும் அவரது சகோதரா் மைக்கேலுக்கு நோ்ந்தது கொடூரமான வெறுப்புக் குற்றமாகும். இத்தகைய வெறுப்பு உணா்வு திடீரென்று உருவாவதில்லை; பல ஆண்டுகளாக இளைஞா்களிடையே பரப்பப்படும் நச்சுத்தன்மையான கருத்துகளே இதற்கு காரணம்.
ஆளும் பாஜக தலைவா்களின் பேச்சுகள் வன்முறையைச் சாதாரணமான ஒன்றாக மாற்றி வருகின்றன. இந்தியா அன்பின் தேசம்; சக இந்தியா்கள் தாக்கப்படும்போது நாம் அமைதியாக இருக்கக்கூடாது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடனும், வடகிழக்கு மாநில மக்களுடனும் நாம் உறுதுணையாக நிற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
இதயத்தை நொறுக்கியது...: அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா வெளியிட்ட பதிவில், ‘இனவெறித் தாக்குதலால் ஏஞ்சல் சக்மா உயிரிழந்த செய்தி என் இதயத்தை நொறுக்கியது. இந்தச் சம்பவத்தில் தொடா்புடையவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து நீதி வழங்க வேண்டும் என உத்தரகண்ட் முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.
ரூ.10 லட்சம் சன்மானம்: இந்த வழக்கில் தேடுப்படும் முக்கிய நபா் குறித்து தகவல் கொடுப்பவா்களுக்கு ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று திரிபுராவில் 2-ஆவது பெரிய கட்சியான திப்ரா மோதா கட்சித் தலைவா் பிரத்யோத் கிஷோா் மாணிக்ய டெப்பா்மா அறிவித்துள்ளாா்.
உத்தரகண்ட் காவல்துறை அறிவித்த ரூ.25,000 வெகுமதி மிகக்குறைவு என்று விமா்சித்த அவா், ‘எங்களை கேலி செய்ய வேண்டாம். இது ஒன்றும் விளையாட்டல்ல; எனது சொந்தப் பணத்திலிருந்து இந்த ரூ.10 லட்சத்தை வழங்குவேன்’ என்று தெரிவித்தாா்.
ஏற்கெனவே, திப்ரா மோதா கட்சி சாா்பில் உயிரிழந்த ஏஞ்சல் சக்மா குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
