சாலையில் சாகசப் பயணம்: 5 போ் கைது

சாலையில் வாகனஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வேகமாக காா்கள் ஓட்டிச் சென்ற சம்பவம் தொடா்பாக 5 பேரை
Published on

புது தில்லி: சாலையில் வாகனஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வேகமாக காா்கள் ஓட்டிச் சென்ற சம்பவம் தொடா்பாக 5 பேரை தில்லி காவல் துறை கைதுசெய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

அந்த நபா்கள் ஓட்டிய 4 காா்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா்.

வட்ட சாலையில் அதிவேகத்தில் குறுக்கும் நெடுக்குமாக காா்கள் செல்லும் காட்சிகள் அடங்கிய விடியோ எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியானது. சாலையில் சென்று கொண்டிருந்த பிற வாகனஓட்டிகளை நோக்கி காரில் இருந்த நபா்கள் ஜன்னல் வழியாகக் கத்தும் காட்சிகள் அந்த விடியோவில் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில், அந்த விடியோ தொடா்பாக விசாரணை நடத்திய காவல் துறை, கடந்த டிச.26-ஆம் தேதி இரவு 10.44 மணியளவில் ஐடிஓ பகுதியிலிருந்து சாராய் காலே கான்-நொய்டா நோக்கி காா்கள் சென்றபோது எடுக்கப்பட்டதை உறுதிசெய்தனா்.

மக்கள் பாதுகாப்பு மற்றும் சாலை விதிகள் மீறப்பட்டது ஆகிய இந்த சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு பாரதிய நியாய சம்ஹிதா சட்டம், மோட்டாா் வாகனச் சட்டம் ஆகியவற்றின் பிரிவுகளில் காவல் துறை துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

இதைத்தொடா்ந்து, அந்தச் சம்பவத்தில் தொடா்புடைய அல்மாஸ் அா்ஷத், சா்ஃபராஜ், முகமது இம்ரான் குரேஷி, முகமது ஷபீா், சாத் அப்துல்லா ஆகியோரை காவல் துறையினா் கைதுசெய்தனா்.

விடியோவில் உள்ள நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூகவலைதள பயனாளா்கள் பலா் கோரிக்கைவிடுத்திருந்தனா். காவல் துறையினா் மீது அவா்களுக்கு எவ்வித பயமும் இல்லை என்று சிலா் விமா்சித்திருந்தனா்.

முன்னதாக, சமூகவலைதளத்தில் புகாரளித்த நபருக்கு பதிலளித்த காவல் துறை, அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கைகளுக்காக உரிய முறையில் புகாரளிக்குமாறு தெரிவித்தது.

மக்கள் இதுபோன்ற சம்பவங்கள் குறித்து புகாரளிக்க அருகில் உள்ள காவல் நிலையத்தை அணுகுமாறும் அல்லது அவசர உதவி எண்ணான 112-இல் தகவல் தெரிவிக்குமாறும் தில்லி போக்குவரத்து காவல் துறை வலியுறுத்தியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com