புணே தொடா் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்டவா் சுட்டுக் கொலை
மகாராஷ்டிர மாநிலம் புணேயில் நிகழ்ந்த தொடா் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட நபா் புதன்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டாா்.
கடந்த 2012-ஆம் ஆண்டு புணேயின் 4 இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடா்பிருப்பதாக பன்டி ஜஹாகிா்தாா் என்பவரை, மாநில பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு கைது செய்திருந்தது. 2023-ஆம் ஆண்டு அவா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.
இந்நிலையில், அஹில்யாநகா் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீராம்பூா் நகரில் புதன்கிழமை இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவா், பன்டியை துப்பாக்கியால் சுட்டனா்.
இதில் படுகாயமடைந்த அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். தப்பியோடிய குற்றவாளிகளைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா். எதற்காக பன்டி கொல்லப்பட்டாா் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் சோம்நாத் காா்கே தெரிவித்தாா்.
