

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் சமரசம் செய்ததாக சீன அரசு கூறியதற்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளைத் தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் நடைபெற்ற மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, சமரசம் செய்ததாக, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ அறிவித்துள்ளார்.
சீன அரசின் இந்த அறிவிப்பு, நாடு முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடி மௌனம் கலைத்து பதிலளிக்க வேண்டும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறப்பட்டதாவது:
“அதிபர் டிரம்ப் கடந்த மே 10 2025 அன்று ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வந்ததாக உரிமைக் கோரியுள்ளார். இதை அவர் பல்வேறு நாடுகளில் 65 முறைகளுக்கும் அதிகமாகக் கூறியுள்ளார். ஆனால், இந்தக் கருத்துக்கும் பிரதமர் இதுவரை மௌனம் கலைக்கவில்லை.
இப்போது சீனா வெளியுறவு அமைச்சரும் அதுபோன்று உரிமைக்கோரி சீனாவும் சமரசம் செய்ததாகக் கூறியுள்ளார். ஜூலை 4 அன்று அபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்தியா உண்மையில் சீனாவை எதிர்கொண்டு வருவதாக ராணுவத் துணைத் தளபதி லெப்டினண்ட் ஜெனரல் ராகுல் சிங் பகிரங்கமாகக் கூறியிருந்தார்.
சீனா திட்டவட்டமாக பாகிஸ்தானுடன் அணிசேர்ந்திருந்த நிலையில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் சமரசம் செய்ததாக சீனா கூறும் கூற்றுக்கள் கவலைக்குரியவை. ஏனெனில், அவை நமது நாட்டு மக்களுக்கு நம்பவைக்கப்பட்ட தகவல்களுக்கு நேரடி முரணாக இருப்பது மட்டுமின்றி, நமது தேசிய பாதுகாப்பையே கேலிக்குள்ளாக்குவது போலத் தெரிகின்றன.
சீனாவுடன் நாம் மீண்டும் தொடங்கியுள்ள உறவுகள் சீனாவின் நிபந்தனைகளின்படியே அமைந்துள்ளன. நமது வர்த்தகப் பற்றாக்குறை இதுவரை இல்லாத உச்சத்தில் உள்ளது. மேலும், நமது ஏற்றுமதிகளில் பெரும்பகுதி சீனாவின் இறக்குமதிகளையே சார்ந்துள்ளன. அருணாசலப் பிரதேசம் தொடர்பாக சீனாவின் நடவடிக்கைகள் அனைத்தும் தடையின்றித் தொடர்கின்றன.
இத்தகைய ஒருதலைப்பட்சமான மற்றும் விரோதமான உறவுக்கு இடையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ திடீரென முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதில் சீனா என்ன பங்கு வகித்தது என்பது குறித்து இந்திய மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.