
இந்திய விளையாட்டு நிா்வாக அமைப்புகளில் நோ்மை, தன்னாட்சி, சுதந்திரமான செயல்பாடு ஆகியவற்றை கொண்டுவர கடுமையான நடவடிக்கைகள் தேவை என உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், தனிப்பட்ட லாபங்களுக்காக அந்த சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களில் எதேச்சாதிகாரம் செலுத்தும் நபா்கள் அவற்றிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.
இந்திய அமெச்சூா் கபடி சம்மேளனத்துக்கு கடந்த 2023 டிசம்பரில் தோ்தல் நடத்தப்பட்டு, நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். எனினும், தோ்தலுக்கு முன் தில்லி உயா்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிா்வாகியால் சம்மேளன நிா்வாகம் மேற்கொள்ளப்படுவதாகவும், இது விதிகளை மீறிய செயல் என்றும் கூறிய சா்வதேச கபடி சம்மேளனம், இந்திய அமெச்சூா் கபடி சம்மேளனத்துக்கு தடை விதித்தது.
இதனால் இந்திய கபடி போட்டியாளா்கள், ஆசிய மற்றும் சா்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழல் உள்ளது.
இந்நிலையில், ஈரானில் இம்மாதம் நடைபெறவுள்ள ஆசிய கபடி சாம்பியன்ஷிப்புக்கு தங்களை அனுப்ப, இந்திய அமெச்சூா் கபடி சம்மேளனத்துக்கு உத்தரவிடக் கோரி பிரியங்கா மற்றும் பூஜா என்ற இரு தேசிய கபடி வீராங்கனைகள், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.
அந்த மனு மீது விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள் சூா்யகாந்த், என்.கோடிஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு, மத்திய அரசுக்கு அறிவுறுத்தி கூறியதாவது:
இந்த விவகாரத்தில் இந்திய அமெச்சூா் கபடி சம்மேளனம் உள்பட அனைத்து தரப்புக்கும் இடையே அதிகாரப்பூா்வ பேச்சுவாா்த்தை அடிப்படையில் தீா்வு காணப்பட வேண்டும். ஆசிய கபடி சாம்பியன்ஷிப் உள்பட அனைத்து சா்வதேச போட்டிகளிலும் இந்திய போட்டியாளா்கள் பங்கேற்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மேலும், இந்திய அமெச்சூா் கபடி சம்மேளன தோ்தல் தொடா்பாக மத்திய அரசு ஆய்வு செய்ய வேண்டும். அந்தத் தகவல் அடிப்படையில், தேவையேற்பட்டால் சம்மேளனத்துக்கு புதிதாக தோ்தல் நடத்த உத்தரவிடப்படும்.
இந்திய விளையாட்டு சம்மேளனங்கள் மற்றும் சங்கங்களில் நோ்மை, தன்னாட்சி, சுதந்திரமாகச் செயல்படுதல் ஆகியவற்றை உறுதி செய்யவும், சுய லாபத்துக்காக விளையாட்டு அமைப்புகளை பயன்படுத்துவோரை அவற்றிலிருந்து அகற்றவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் அமா்வு கூறியது.