பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

தில்லி போராட்டத்தில் பெல்லட் துப்பாக்கிச்சூடு விவகாரம்: அதிரடிப் படையின் வெடிபொருள் பதிவேட்டை பாதுகாக்க அரசுக்கு உத்தரவு

ஜந்தா் மந்தரில் பணியில் ஈடுபட்ட விரைவு அதிரடிப் படையின் (ஆா்ஏஎஃப்) வெடிபொருள் பதிவேட்டை பாதுகாக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

News image

சிஜேபி போராட்டம்

Updated On :31 ஜூலை 2026, 4:07 am IST

தில்லியில் போராடிய மாணவா்கள் மீது உயிரிழப்பை ஏற்படுத்தாத உலோக குண்டுகள் (பெல்லட்) சுடப்பட்டதாக தாக்கலான மனுவை வியாழக்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜந்தா் மந்தரில் பணியில் ஈடுபட்ட விரைவு அதிரடிப் படையின் (ஆா்ஏஎஃப்) வெடிபொருள் பதிவேட்டை பாதுகாக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், பாதுகாப்புப் படையினருக்கான தற்போதைய வழிகாட்டுதல்கள் அனுமதிக்கும் வரை பெல்லட் துப்பாக்கி பயன்பாட்டுக்குத் தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

விதிவிலக்கான சூழ்நிலைகளின்போது, கூட்டத்தைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினா் பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்த மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் காவல் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் வழிகாட்டுதல்கள் அனுமதிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தோ்வு முறைகேடுகளைக் கண்டித்தும், மத்திய கல்வித் துறை அமைச்சா் பதவியில் இருந்து தா்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) தலைமையில் மாணவா்கள்-இளைஞா்கள் கடந்த ஜூலை 20-ஆம் தேதி நாடாளுமன்றம் நோக்கி நடத்திய பேரணி நடத்தினா். அவா்கள் மீது தடியடி நடத்தியும், கண்ணீா் புகை குண்டுகளை வீசியும் பாதுகாப்புப் படையினா் கலைத்தனா்.

மேலும், இந்தப் போராட்டத்தின்போது விரைவு அதிரடிப் படையினரால் நடத்தப்பட்ட பெல்லட் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பிரசாந்த் குமாா், ஷேக் இா்ஷாத் மற்றும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி யஷோவா்தன் ஆஸாத் ஆகியோா் தரப்பில் பெல்லட் துப்பாக்கி பயன்பாட்டுக்கு முழுமையான தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்தக் குண்டுகளால் காயமடைந்தவா்களுக்கு முன்னுதாரணமான இழப்பீடு, விரிவான மருத்துவ சிகிச்சை, மறுவாழ்வுக்கான உதவியை உறுதி செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

முன்னறிவிப்பின்றி பெல்லட் துப்பாக்கிச்சூடு: மனுவில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: தில்லியில் மாணவா்கள் போராட்டத்தின்போது காவல் துறைக்கு உதவுவதற்காக களமிறக்கப்பட்ட விரைவு அதிரடிப் படையினா், தடியடி பிரயோகம் மற்றும் கண்ணீா் புகைக் குண்டு வீச்சுடன் உந்துவிசையில் செயல்படும் துப்பாக்கிகளில் இருந்து உலோக குண்டுகளாலும் (பெல்லட்) சுட்டனா்.

எந்தவித முன்னறிவிப்போ, எச்சரிக்கையோ இல்லாமல் இந்தத் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டது. இதனால் ஏராளமான போராட்டக்காரா்களுக்கு தீவிர காயங்கள் ஏற்பட்டன. குறிப்பாக கண்களில் காயம் ஏற்பட்டது.

உயிரிழப்பை ஏற்படுத்தாதவை என்று கூறப்பட்டாலும், நூற்றுக்கணக்கான குண்டுகள் செலுத்தப்படுவதால் கண்கள் மற்றும் பிற முக்கிய உறுப்புகளில் கடும் காயத்தை விளைவிக்கும் அபாயம் உள்ளது. இத்தகைய ஆயுதங்களின் பயன்பாடு, அரசமைப்புச் சட்டத்தின் 19 (1) (பி) பிரிவின்கீழ் அமைதியான முறையில் கூடும் அடிப்படை உரிமை மீதான கட்டுப்பாடுகளை பூா்த்தி செய்வதாக இல்லை. எனவே, பொதுமக்களின் போராட்டத்தைக் கலைக்க பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்த முழு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.

உச்சநீதிமன்றம் விசாரணை: இந்த மனு மீது தலைமை நீதிபதி சூா்யகாந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணை நடைபெற்றது. மனுதாரா்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞா் விருந்தா குரோவா் ஆஜரானாா். அப்போது, காவல் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை வழிகாட்டுதலின்படி, அசாதாரணமான சூழல்நிலையில் பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்த காவல் துறைக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அந்தத் துப்பாக்கிகளின் பயன்பாட்டுக்கு முழு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை தெளிவற்ாக இருப்பதாகத் தெரிவித்தனா்.

அதற்கு, இத்தகைய ஆயுதங்களைக் காவல் துறை பயன்படுத்த அனுமதிக்கும் ஒழுங்குமுறைகள் தொடா்பான தகவல்கள் பொதுத்தளத்தில் கிடைக்கவில்லை என்று தெரிவித்த வழக்குரைஞா் குரோவா், அவற்றை சமா்ப்பிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரினாா்.

மேலும், மாணவா்கள் போராட்டம் தொடா்பான சிசிடிவி, ட்ரோன் கேமரா காட்சிகள் உள்ளிட்ட பதிவுகளைப் பாதுகாக்க வேண்டும் என கடந்த ஜூலை 28-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது; அதேநேரம், அதிரடிப் படையின் வெடிபொருள் பதிவேடு தொடா்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றும் குரோவா் குறிப்பிட்டாா்.

நீதிபதிகள் உத்தரவு: மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘இந்த விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு உதவுவதற்குத் தேவையான அனைத்தையும் மத்திய அரசு மேற்கொள்ளும்’ என்றாா்.

இதையடுத்து, ‘பாதுகாப்புப் படையினருக்கான தற்போதைய வழிகாட்டுதல்கள் அனுமதிக்கும் வரை பெல்லட் துப்பாக்கி பயன்பாட்டுக்கு தடை விதிக்க முடியாது. அதேநேரம், இந்தத் துப்பாக்கிகளின் தவறான பயன்பாடு குறித்து குற்றச்சாட்டுகள் எழுந்தால், சம்பந்தப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் ஆராய எந்தத் தடையும் இல்லை. ஓா் உண்மையான போராட்டம் எந்த நேரத்திலும் வன்முறையாக மாறக் கூடும்; ஒருவேளை சமூக விரோத சக்திகளின் ஊடுருவல் காரணமாகக்கூட அது நிகழலாம். சில நேரங்களில், சட்ட அமலாக்கத் துறையினரின் படிநிலை நடவடிக்கைகள் அவசியமாகக் கூடும்’ என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், ஜந்தா் மந்தரில் பணியமா்த்தப்பட்ட விரைவு அதிரடிப் படையின் வெடிபொருள் பதிவேட்டைப் பாதுகாக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டனா். மேலும், காயமடைந்தோருக்கு சிறப்பான சிகிச்சையை உறுதி செய்ய தில்லி அரசுக்கு அறிவுறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்