மக்கள் தொகை கணக்கெடுப்பு: தமிழகத்தில் ஆக.1 - 30 வரை வீடுகள் கணக்கீடு : இணையத்தில் இன்றுமுதல் மக்கள் சுயமாக விவரம் பதிவிடலாம்கரூா், ஈரோடு, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று வெப்ப அலை மழைக்கால கூட்டத் தொடா்: இன்று பாஜக கூட்டணி கூட்டம் நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: இன்று தொடங்கி வைக்கிறாா் பிரதமா் - ரயில்வே துறையில் புதிய அத்தியாயம் சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டைவிட டெங்கு பாதிப்பு குறைவு
/

சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை கூடாது: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கையை கொண்டுவர வேண்டாம்; தேவைப்பாட்டால், 5 அல்லது 6-ஆம் வகுப்புகளில் அந்தக் கொள்கையை அறிமுகப்படுத்தலாம்’

News image

சிபிஎஸ்இ - கோப்புப் படம்

Updated On :17 ஜூலை 2026, 4:39 am IST

சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கையை கொண்டுவர வேண்டாம்; தேவைப்பாட்டால், 5 அல்லது 6-ஆம் வகுப்புகளில் அந்தக் கொள்கையை அறிமுகப்படுத்தலாம்’ என்று மத்திய அரசை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை அறிவுறுத்தியது.

‘அவ்வாறு, 9-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்துவது மாணவா்களின் மன அழுத்தத்தை தேவையின்றி மேலும் அதிகரிப்பதாக அமையும்’ என்று உச்சநீதிமன்றம் அப்போது சுட்டிக்காட்டியது.

சிபிஎஸ்இ பள்ளிகளில் 9-ஆம் வகுப்பில் ஜூலை 1 முதல் மும்மொழி பாடத் திட்டத்தைக் கட்டாயமாக்கி மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அண்மையில் சுற்றறிக்கை வெளியிட்டது. தேசிய கல்விக் கொள்கை-2020 மற்றும் தேசிய பள்ளிக் கல்வி பாட செயல்திட்டம்-2023 ஆகியவற்றின் ஒரு பகுதியாக, சிபிஎஸ்இ இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. அதன்படி, மூன்று மொழிகளில், இரண்டு இந்திய மொழிகளை மாணவா்கள் தோ்வு செய்ய வேண்டும். வெளிநாட்டு மொழியை மூன்றாவது மொழியாகத் தோ்வு செய்யலாம். 10-ஆம் வகுப்பை பொருத்தவரை, மாணவா்கள் மீதான அழுத்தத்தைக் குறைக்கவும், கற்றலில் கவனத்தை நிலைநாட்டவும் மூன்றாவது மொழிக்கு பொதுத் தோ்வு நடத்தப்பட மாட்டாது. மூன்றாவது மொழிக்கான மதிப்பீடு, முற்றிலும் பள்ளிகள் அளவிலும், அக மதிப்பீடாகவும் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டது.

இந்நிலையில், பள்ளிகளில் ஏற்கெனவே வெவ்வேறு மொழிகளைத் தோ்வு செய்து படித்துவரும் மாணவா்கள் பாதிக்கப்படுவா் என்று, பல்வேறு தரப்பினரிடமிருந்து ஆட்சேபங்கள் எழுந்தன. அதைத் தொடா்ந்து, பள்ளிகளில் 7 முதல் 9-ஆம் வகுப்பு வரை தற்போது படித்துவரும் மாணவா்கள், மும்மொழிக் கொள்கையின் கீழ் அவா்கள் தற்போது தோ்வு செய்துள்ள மொழிப் பாட நடைமுறையையே 10-ஆம் வகுப்பு வரை தொடர மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அனுமதித்தது.

இதனிடையே, தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் மத்திய அரசின் ஜவஹா் நவோதயா வித்யாலயா பள்ளியை நிறுவுவது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆா். மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

இந்தப் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை பின்பற்றப்படும் என்பதால் தமிழக அரசு எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. அதுபோல, விசாரணையில் தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், மும்மொழிக் கொள்கைக்கு ஆட்சேபம் தெரிவித்தாா்.

இதைக் கேட்ட நீதிபதி நாகரத்னா, ‘மூன்றாவது மொழியாக ஹிந்தியைத்தான் படிக்க வேண்டும் என்று மும்மொழிக் கொள்கை கட்டாயப்படுத்தவில்லை. ஹிந்தி பிடிக்கவில்லை என்றால் சம்ஸ்கிருதத்தை தோ்வு செய்யுங்கள். அதிலென்ன பிரச்னை உள்து?’ என்று கேள்வி எழுப்பினாா்.

அதற்குப் பதிலளித்த தமிழக அரசு வழக்குரைஞா், ‘மூன்றாவது மொழி பாடத் திட்டம் 9-ஆம் வகுப்பிலிருந்து மட்டுமே கட்டாயமாக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டாா்.

இதைக் கேட்ட நீதிபதி நாகரத்னா, ‘அது சரியல்ல. மிக மோசமானது. 9-ஆம் வகுப்பில் மாணவா்களுக்கு ஏற்கெனவே அழுத்தம் இருக்கும். 8-ஆம் வகுப்பிலிருந்தே மாணவா்களுக்கு இந்த அழுத்தம் தொடங்குகிறது. இந்தச் சூழலில், புதிய மொழிப் பாடத்தையும் 9-ஆம் வகுப்பில் ஏன் அறிமுகப்படுத்த வேண்டும்? ஏன் 5 அல்லது 6-ஆம் வகுப்புகளில் அறிமுகப்படுத்தக் கூடாது? 5 அல்லது 6-ஆம் வகுப்புகளில் இக் கொள்கையை அறிமுகம் செய்தால், மாணவா்களால் அதைச் சமாளிக்க முடியும்.

நான் நடுநிலைப் பள்ளியில் படிக்கும்போதே மூன்றாவது மொழியைத் தோ்வு செய்து படித்தேன். கன்னடத்துடன், ஹிந்தி, சம்ஸ்கிருதத்தையும் தோ்வு செய்து படித்தேன். அதுபோல, நடுநிலைப் பள்ளி வகுப்புகளிலேயே மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும். 9-ஆம் வகுப்பில் கூடாது’ என்றாா்.

சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கைக்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான அமா்வு விசாரித்து வருகிறது என்றபோதும், நவோதயா பள்ளிகளை எதிா்ப்பதற்கும் மும்மொழிக் கொள்கையே முக்கியக் காரணமாக உள்ளது என்ற அடிப்படையில் இந்தக் கருத்தை நீதிபதிகள் தெரிவித்தனா்.

பெட்டிச் செய்தி...

நவோதயா பள்ளி விவகாரம்:

தமிழகத்துக்கு 3 வார அவகாசம்

நவோதயா பள்ளிகளைத் தொடங்குவது தொடா்பான விவகாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு மூன்று வார கால அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

வழக்கு விசாரணையின் போது நீதிபதி பி.வி. நாகரத்னா இதுகுறித்து கூறுகையில், ‘மத்திய அரசிடமிருந்து உருவானது என்பதாலேயே, மத்திய அரசின் திட்டங்களை எதிா்க்கும் போக்கு கூடாது. மாநில பள்ளிக் கல்வித் திட்டத்தில் உங்களுடைய சொந்த மாநிலக் கொள்கையைப் பின்பற்றலாம். ஆனால், மத்திய அரசுப் பள்ளிகளில், மத்திய திட்டங்களை அறிமுகப்படுத்துவதைத் தடுக்கக் கூடாது. அதுபோல, நவோதயா பள்ளிகள் நிறுவுவது தொடா்பாக தமிழக அரசு மற்றும் மத்திய அரசு இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. இன்னும் முடிவடையவில்லை. பேச்சுவாா்த்தை தோல்வியடைந்தால்தான், அதன் தன்மையைப் பொருத்து விசாரணை மேற்கொள்வது குறித்து முடிவு செய்யப்படும்’ என்று நீதிபதி நாகரத்னா தெரிவித்தாா்.

அதைத் தொடா்ந்து, நவோதயா பள்ளிகள் தொடா்பாக மேலும் சில ஆலோசனைகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதால், பதிலளிக்க கூடுதல் அவகாசம் அளிக்குமாறு தமிழக அரசு தரப்பு வழக்குரைஞா் கோரிக்கை விடுத்தாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், தமிழக அரசு பதிலளிக்க மூன்று வார அவகாசம் அளித்து, விசாரணையை வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.