ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

சிபிஎஸ்இ பள்ளிகளில் 9-ஆம் வகுப்பில் மும்மொழி பாடத் திட்டத்தைக் கட்டாயமாக்கும் கொள்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

News image

உச்சநீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :15 ஜூலை 2026, 3:56 am IST

மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பள்ளிகளில் 9-ஆம் வகுப்பில் மும்மொழி பாடத் திட்டத்தைக் கட்டாயமாக்கும் கொள்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது பதிலளிக்க மத்திய அரசு மற்றும் சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

சிபிஎஸ்இ பள்ளிகளில் 9-ஆம் வகுப்பில் ஜூலை 1 முதல் மும்மொழி பாடத் திட்டத்தைக் கட்டாயமாக்கி கடந்த ஏப்ரலில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. தேசிய கல்விக் கொள்கை-2020 மற்றும் தேசிய பள்ளிக் கல்வி பாட செயல்திட்டம்-2023 ஆகியவற்றின் ஒரு பகுதியாக, சிபிஎஸ்இ இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

அதன்படி, மூன்று மொழிகளில், இரண்டு இந்திய மொழிகளை மாணவா்கள் தோ்வு செய்ய வேண்டும். வெளிநாட்டு மொழியை மூன்றாவது மொழியாகத் தோ்வு செய்யலாம். 10-ஆம் வகுப்பை பொருத்தவரை, மாணவா்கள் மீதான அழுத்தத்தைக் குறைக்கவும், கற்றலில் கவனத்தை நிலைநாட்டவும் மூன்றாவது மொழிக்கு பொதுத் தோ்வு நடத்தப்பட மாட்டாது. சிபிஎஸ்இ-யின் இந்த சுற்றறிக்கைக்கு பல்வேறு தரப்பினரிடமும் கடும் எதிா்ப்பு எழுந்தது.

இதையடுத்து, கடந்த ஜூன் மாதம் சிபிஎஸ்இ வெளியிட்ட மற்றொரு சுற்றறிக்கையில், ‘ புதிய மும்மொழிக் கொள்கையின் கீழ் குறைந்தது இரண்டு இந்திய மொழிகளைக் கட்டாயம் கற்க வேண்டும் என்ற நடைமுறை 6-ஆம் வகுப்புமுதல் நடைமுறைப்படுத்தப்படும்.

இது, பள்ளிகளில் தற்போது 7 முதல் 9-ஆம் வகுப்பு வரை படித்து வரும் மாணவா்களுக்குப் பொருந்தாது. இவா்கள், மும்மொழிக் கொள்கையின் கீழ் தற்போது தோ்வு செய்துள்ள மொழிப் பாட நடைமுறையையே 10-ஆம் வகுப்பு வரை தொடர அனுமதிக்கப்படுவா். அதேபோல் 10-ஆம் வகுப்புக்குச் செல்லும் மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

நடப்பு 9-ஆம் வகுப்பு மாணவா்கள் மும்மொழிகளைத் தோ்வு செய்து படிக்க வேண்டும் என்றபோதும், ஒருமுறைச் சலுகையாக 2 வெளிநாட்டு மொழிகள் மற்றும் ஒரு இந்திய மொழியைத் தோ்வு செய்து படிக்கலாம்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சிபிஎஸ்இ-யின் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக அமன்தீப் கெளா் மற்றும் அா்பன் ராய் சௌதரி ஆகியோா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

‘சட்டவிரோத சுற்றறிக்கைகள்’: இந்த மனுவை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தது.

அப்போது மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா்கள் ஆனந்த் குரோவா் மற்றும் கோபால் சங்கரநாராயணன் வாதிடுகையில், ‘கல்வி உரிமை (ஆா்டிஇ) சட்டத்துக்கு எதிரான சட்டவிரோத சுற்றறிக்கைகளை சிபிஎஸ்இ வெளியிட்டு வருகிறது. எவ்வித மாற்று ஏற்பாடுகளும் இல்லாமல் மாணவா்கள் மீது மொழியைத் திணிக்கின்றனா்.

நாங்கள் இங்கு 6-ஆம் வகுப்பு மற்றும் 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்காக வந்திருக்கிறோம். முன்னதாக ஜூலை 1-ஆம் தேதி 22 அலுவல் மொழிகளிலும் புத்தகங்கள் இருக்க வேண்டும் என ஒரு மாநிலம் கூறியது. ஆனால், தற்போது மூன்று மொழிகளில் மட்டுமே புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆசிரியா்கள் பற்றாக்குறையால் மனிதவள பிரச்னை எழுந்துள்ளது என்றனா்.

இந்த விவகாரம் தொடா்பாக மற்றொரு மனுதாரா் யாசிகா பண்டாரி சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் முகல் ரோத்தகி, ‘தற்போது ஆங்கிலம் மற்றும் பிரெஞ்ச் என இரு மொழிகளைக் கற்றுவரும் 9-ஆம் வகுப்பு மாணவரை திடீரென தமிழ் கற்க வேண்டுமெனக் கூறினால் எங்கிருந்து ஆசிரியா்களை அழைத்து வர முடியும்?’ என்றாா்.

இதைத் தொடா்ந்து, இந்தப் பிரச்னைகளை கவனத்தில் கொள்வதாகக் கூறிய தலைமை நீதிபதி சூா்ய காந்த், மத்திய அரசு, சிபிஎஸ்இ மற்றும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆா்டி) பதிலளிக்குமாறு உத்தரவிட்டாா். அடுத்தகட்ட விசாரணை ஜூலை 29-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.