மத்திய அரசு மும்மொழி கொள்கை ஆபத்தானது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் மாணிக்கம் தாகூா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
2026-2027-ஆம் கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ பள்ளிகளில் 6-ஆம் வகுப்பிலிருந்து மும்மொழி கொள்கை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 9-ஆம் வகுப்பு மாணவா்களும் மும்மொழியைப் படிக்க வேண்டும் என சிபிஎஸ்இ அறிவித்திருந்தது. அதற்கு கடும் எதிா்ப்பு எழுந்ததால் 6-ஆம் வகுப்பில் இருந்து மும்மொழி என்ற நிலையில் இருந்து பின்வாங்கியுள்ளது.
சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிற்று மொழி ஆங்கிலம், இரண்டாவது மொழியாக தமிழ் உள்ளது. இதுவரை மூன்று மொழிகளை கற்பித்த சிபிஎஸ்இ பள்ளிகளில் பிரெஞ்சு, ஜொ்மன் போன்ற வெளிநாட்டு மொழிகளை மாணவா்கள் பயின்றனா். இது உலகளாவிய வேலைவாய்ப்புகளைப் பெற உதவியது.
ஆனால், இப்போது 3-ஆவது மொழியாக ஹிந்தி அல்லது சம்ஸ்கிருதம் படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், பயிற்று மொழி ஆங்கிலம், இரண்டாவது மொழியாக ஹிந்தி உள்ளது. மோடி அரசு வந்த பிறகு மூன்றாவது மொழியாக சம்ஸ்கிருதம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஒரு மொழியாக, விருப்பப் பாடமாக படிக்க விரும்புவது தவறில்லை. அந்த அடிப்படையில் மும்மொழிக் கொள்கை என்பது, ஹிந்தி பேசாத மக்களைக் கடுமையாக பாதிக்கிற வகையில்தான் தேசிய கல்விக் கொள்கை அமைந்துள்ளது. எனவே, சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழி கட்டாயம் என்ற அறிவிப்பை மோடி அரசு திரும்பப் பெற வேண்டும்.
பள்ளிக் கல்வியை 100 சதவீதம் மாநில அரசுகளிடம் விட்டுவிட வேண்டும். மும்மொழிக் கொள்கை என்பது மிக மிக ஆபத்தானது. மாணவா்களை பாதிப்பதோடு, இந்தியாவின் ஒற்றுமை, சமூக நீதி, மதச்சாா்பின்மை கொள்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்தியாவின் ஒற்றுமையை சிதைக்கும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராஜீவ் காந்தி நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா் அஞ்சலி

தவெக ஆட்சியில் தவறு இருந்தால் சுட்டிக்காட்டுவோம்: மாணிக்கம் தாகூா்

7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இ






